கொரொனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி கொண்டு தான் இருக்கிறது. மேலும், இந்தியாவில், 1.56 லட்சம் பேரின் உயிர் குடித்த கொரோனா ஆட்டம், பெருமளவு குறைந்திருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை, 8.49 லட்சம் பேரை வைரஸ் தாக்கியுள்ளது. 8.32 லட்சம் பேர் மீண்டு விட்டனர்.
4,074 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12, ஆயிரத்து 472 பேரின் உயிரை, நம் மாநிலம் பறி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் தினசரி, 50 ஆயிரம் பேர் சோதிக்கப்படுகின்றனர். இதில் உறுதியாகும் பாதிப்பு, 500க்கும் குறைவு தான். பாதிப்பு விகிதம், 0.89 சதவீதமாக உள்ளது.
தற்போதைய சூழலில், தமிழகம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, இப்புள்ளி விபரம் காட்டுகிறது.
ஆனால், இன்னும் எத்தனை நாளுக்கு என்பது தான் தெரியவில்லை. ஏனெனில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு எகிற துவங்கியுள்ளது.
பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால், தமிழக அரசும் கொரோனா விஷயத்தில் அசந்து விட்டது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல் பணிகள் தான் மும்முரமாக நடக்கின்றன.
இரண்டாவது அலை வீசும் ஐந்து மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு தாராள போக்குவரத்து நடக்கிறது. விமானங்கள், ரயில்கள், பஸ்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்குகின்றன.
குறிப்பாக, மஹாராஷ்டிரா, கேரளாவில் இருந்து கொத்து, கொத்தாக தமிழகத்திற்கு மக்கள் வருகின்றனர். இவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கூட கிடையாது.
கேரளாவை போல, அசட்டையாக இருந்து, தமிழகமும் மெத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. இப்போதே விழித்து, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
தற்போது, இரண்டாவது அலையில் சிக்கி உள்ள ஐந்து மாநிலங்களில் திடீரென கொரோனா மீண்டும் உயர்வதால், இம்மாநிலங்களை உடனடியாக, ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளாக அறிவிக்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தல் சமயத்தில், இரண்டாம் அலை தாக்கிவிடக் கூடாது. எனவே வைரஸ்பரவல் அதிகமுள்ள கேரளா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களை, ‘ஹாட் ஸ்பாட்’ பட்டியலில் சேர்த்து, உடனடியாக முன்னெச்சரிக்கை பணிகளை துவங்க வேண்டும்.
இம்மாநிலங்களில். இருந்து தமிழகம் வருவோர், ‘கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும். விமான நிலையங்கள் வந்த பிறகும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.
கேரளாவில் கொரோனா வெறியாட்டம் நடத்தி வரும் இவ்வேளையில், மீண்டும் எல்லைகளை மூடுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம். கர்நாடக எல்லையிலும் கண்காணிப்பு மேற்கொள்வது அவசியம்.
மேலும், எவ்வித பெருந்தன்மையும் இன்றி பரிசோதனை செய்தால் மட்டும் தமிழகத்தில் பரவுவதை தடுக்க முடியும்.
முக்கியமாக, பயணத்தின்போது முககவசம் அணிவது கட்டாயம், பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.