சிக்கன் சாப்பிட்ட ஐந்து பேர் பலி… நூற்றுக்கணக்கானோர் உடல் நலம் பாதிப்பு: விலை குறைவு என வாங்கியவர்களுக்கு நேர்ந்த கதி

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட ஐந்து பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோர் மோசமான அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து சில சிக்கன் தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

நோய்க்கிருமி தாக்கிய அந்த சிக்கன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்ட கோழிக்கறி, போலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நோய்க்கிருமி தொற்றிய அந்த கோழிக்கறி, விலை குறைந்த சிக்கன் கட்லெட்டுகள் போன்ற உணவு வகைகளாக தயாரிக்கப்பட்டு பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட சுமார் 480 பேருக்கு சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமி தாக்கி மோசமான உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில் மூன்றில் ஒருவரின் நிலைமை மிகவும் மோசமடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அந்த சிக்கன் தயாரிப்புகள் விலை குறைவாக இருந்ததால், பல பெற்றோர்கள் அவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த சிக்கன் உணவு வகைகளால் பாதிக்கப்பட்டவர்களில் 44 சதவிகிதம் பேர், 16 மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

KFC சிக்கனை நினைவூட்டும் விதத்தில் இந்த தயாரிப்புகள் அமைந்துள்ளதாலும், அவை விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கியிருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, SFC நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகள் குறித்து உணவு தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் சில சிக்கன் தயாரிப்புகளை திரும்பப் பெறவும் உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment