அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து கொடூர கொலை…

by Lifestyle Editor
0 comment

திருவாரூர்

முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் ராஜேஷ் (38). அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்றார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், ராஜேஷ் இன்று காலை இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

முத்துப்பேட்டை டாஸ்மாக் அருகே சென்றபோது, அவரை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வழிமறித்த மர்மகும்பல் அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய ராஜேஷை காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொன்ற அந்த கும்பல், அவரது தலையை துண்டித்து, சாலையில் வீசி சென்றனர்.

தகவல் அறிந்து முத்துப்பேட்டை டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலையும், அங்கு கிடந்த கைத் துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது தலையை மீட்க முயன்றபோது, கொலையாளிகளை கைதுசெய்யக் கோரி ராஜேசின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போராட்டக்காரர்களுடன், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர் படுகொலையயால் முத்துப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Posts

Leave a Comment