ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

by Lankan Editor
0 comment

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது அமர்வு இன்றையதினம் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.

இம்முறை கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

இன்றைய முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் இருந்தவாறு இணைய வழியில் ஜெனீவா பேரவையில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சரின் உரையைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையாரின் இலங்கை குறித்த வாய்வழி அறிக்கை அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படும்.

யு.என்.எச்.ஆர்.சி அமர்வின் தொலைகாணொளி அமர்வுகளில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளது.

இந்த குழுவில் சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியா, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் அடங்குகின்றனர்.

பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் மலாவி ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான கோர் குழு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த தீர்மானத்தை இன்றையதினம் சமர்ப்பிக்கவுள்ளது.

யு.என்.எச்.ஆர்.சி அமர்வு மார்ச் 23 வரை தொடரும்.

Related Posts

Leave a Comment