கொங்கர்பாளையம் ஶ்ரீஆதிசக்தி அம்மன் கோயில் குண்டம் திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

by Lifestyle Editor
0 comment

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தோப்பூரில் உள்ள ஸ்ரீஆதிசக்தி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் அருகேயுள்ள கொங்கர் பாளையம் தோப்பூர் பகுதியில் ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை குண்டம்
திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த முறை திருவிழா நடத்த முடியாததால், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீக்குண்டம் திருவிழா கடந்த 15ந்தேதி காய்வெட்ட செல்லுதலில் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை மடப்பள்ளியில் இருந்து ஆதிசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், இரவு அனி தண்ணி அணிந்து வாங்குதல் மற்றும் குண்டம் திறத்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று அதிகாலை அம்மை அழைத்தல் விழாவை தொடர்ந்து, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயில் தலைமை பூசாரி சதீஷ் முதலில் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தார். பின்னர், ஸ்ரீஆதிசக்தி அம்மன் கோயில் பூசாரிகள் 11 பேர் மட்டுமே தீக்குணடம் இறங்கி வழிபாடு செய்தனர். முன்னதாக திருவிழாவிற்கு கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், தொப்பூர், குமரன்கரடு உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், குண்டத்தை சுற்றிலும் பூக்களால் அலங்காரம் செய்து தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரபூஜை, கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கும் கோயிலிலேயே அசைவ உணவு அன்ன தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும் நிலையில், நாளை மறு பூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.

Related Posts

Leave a Comment