என்னை கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்.. நெகிழும் சிவகார்த்திகேயன்

by Lifestyle Editor
0 comment

தமிழ்சினிமாவின் டாப்-10 நடிகர் பட்டியலுக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவரின் இந்த வளர்ச்சி அபாரமானது. என்ஜினியரிங் படித்துக்கொண்டே, விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.

சாலமன் பாப்பையா குரலில் மிமிக்ரி செய்துதான் ஆரம்ப நாட்களில் காமெடி செய்துவந்தார். அதன்பின்னர் ரஜினிகாந்த் குரலிலும், அடுத்து வைரமுத்து உள்ளிட்ட சிலரின் குரலிலும் பேசி அசத்த ஆரம்பித்தார். வைரமுத்து முன்பாகவே அவர் குரலில் பேசி வைரமுத்துவையே நெளிய வைத்த சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் முன்பாகவே அவர் குரலிலும் பேசி அசரடித்தார்.

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள்தான் முழு நேர தொழில் என்று இருந்த சிவகார்த்திகேயன் திடீரென சினிமாவுக்குள் நுழைந்து குறுகிய காலத்திற்குள் உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டார்.

காவல் அதிகாரியான தந்தையை இழந்தபிறகு சிவகார்த்திகேயனையும், அவரது அக்காவையும் வளர்த்து படிக்க வைத்தவர் தாயார்தான். அதனால்தான், தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதினை, அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று, அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

’’சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி’’ என்று சொல்லி இருக்கும் அவர், ’’தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’’ என்று நெகிழ்கிறார்.

Related Posts

Leave a Comment