டீன் ஏஜ் காலகட்டம்: பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 10 வழிகள்

by Lifestyle Editor
0 comment

குழந்தைகள் டீன் ஏஜ் வயதை தொட்டதும், பெற்றோருக்கு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஏனெனில் டீன் ஏஜ் பருவத்தில் தடம் தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்ற கவலை பெற்றோரை வாட்டும். அந்த சமயத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம், அவர்களை சிறப்பாக வழிநடத்த முடியும். அதற்கான 10 வழிகள் இதோ…

1. பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்:

பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம்.

2. பயணம் செய்யுங்கள்:

இருவரும் சேர்ந்து சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை பிள்ளைகளின் நண்பர்களுடன் சேர்ந்து மலையேற்றம், மினி சுற்றுலா என வித்தியாசமாக ஏதாவது செய்யலாம். ஒரே விஷயங்களை தொடர்ந்து பின்பற்றாமல் மாற்றங்களை புகுத்துவது இருவருக்கும் இடையே இணக்கத்தை அதிகப்படுத்தும்.

3. குழந்தைகளிடம் மாணவராகுங்கள்:

பெற்றோர் கற்ற விஷயங்களுக்கும், குழந்தைகள் கற்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பாடத்திட்டம், தொழில்நுட்பம் என புதிய விஷயங்களை பிள்ளைகள் வழியே கேட்டறிந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைகள் சொன்ன விஷயத்தை முயற்சித்து பார்க்கும்போது ‘நீ சொன்ன விஷயத்தை கடைப்பிடித்தேன். பயனுள்ளதாக இருந்தது’ என்று மனம் விட்டு பாராட்டுங்கள். அப்போதுதான் மேலும் பல விஷயங்களை உங்களுடன் பகிர முன்வருவார்கள்.

4. ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்:

டீன் ஏஜ் பருவத்தை நெருங்கும்போது டிரெண்டிங்கான சிகை அலங்காரம், உடைகளை தேர்வு செய்வது பலருக்கும் பிடிக்கும். அவர்களின் ஆசைக்கு அணைபோடாதீர்கள். சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். தற்போது, ஆண் பிள்ளைகள் குடுமி வைத்துக்கொள்வது, தலையில் கோடு போல முடி வெட்டிக்கொள்வது பேஷனாக இருக்கிறது. இதுபோன்ற ஆசைகளை அவர்களது விடுமுறை காலங்களில் செய்துகொள்ள அனுமதியுங்கள்.

5. உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்:

இப்பருவத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சட்டென்று சந்தோஷமாவார்கள். அத்தகைய மாறிவரும் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்துங்கள். ‘நீ எப்படி கோபப்படலாம்? நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்’ என அடக்க முயற்சி செய்யாதீர்கள்.

6. பேசக்கூடாத விஷயங்களை பேசுங்கள்:

ஆண், பெண் இணைந்து வாழும் வாழ்வில் பாலுறவு பற்றி பேசுவதும், முழுமையாக தெரிந்துகொள்ளுவதும் அவசியம். அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எதிர்பாலின இனக்கவர்ச்சி போன்றவை டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும். அவர்கள் கேட்காமலேயே பாலின ஈர்ப்பு பற்றிய அறிவியல் உண்மையை விளக்குங்கள். அதில் ஏற்படும் சந்தேகங்களை உங்களிடமே கேட்குமாறு அன்புடன் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கேற்ப பக்குவமான பதில்களைச் சொல்லுங்கள். எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்க்காதீர்கள்.

7. சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்:

இப்படிச் செய்யாதே; அப்படிச் செய்யாதே என்று சொல்வதைவிட, அது போன்ற செயல்களை செய்தபோது ஏற்பட்ட உங்கள் சொந்த அனுபவத்தை சுவாரசியமாக சொல்லுங்கள். அது அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும். பின்பு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க பழகிவிடுவார்கள்.

8. சமூகத்தோடு பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்:

குழந்தைகளைச் சமூகத்தின் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள். முதியோர் இல்லங்களுக்கு சென்று பெரியவர்களிடம் பழகுதல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல் போன்ற வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

9. திட்டுதல், அடித்தல் வேண்டாம்:

பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ வேண்டாம். இந்த வயதில் சமூக வலைத்தளம், எலக்ட்ரானிக் கேஜட்ஸ் போன்றவற்றின் மேல் ஆர்வமாக இருப்பார்கள். அதனால், சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில், நிலைமையைப் புரிந்துகொண்டு பின்விளைவுகளை எடுத்துக்கூறி வழிநடத்துங்கள். அதைவிடுத்து திட்டுவதும், அடிப்பதும் பிரச்சினையைத் தீர்க்காது.

10. மனதை ஒருமுகப்படுத்த உதவுங்கள்:

டீன்-ஏஜ் பருவத்தில் மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். இறைவழிபாட்டை கற்றுக்கொடுங்கள். அதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதை உணர்வுப்பூர்வமாக உணர்வார்கள்.

Related Posts

Leave a Comment