நம்முடைய உணவில் முக்கியமான அங்கம் வகிக்கும் காய்கறி வகைகளில், மிக முக்கியமான இடத்தை பீர்க்கங்காய்க்குக் கொடுக்கலாம். அந்த அளவுக்குப் பல நோய்கள் வராமல் தடுக்கும் குணம் கொண்டது என்பதுடன் வந்த நோயை விரட்டும் திறனும் கொண்டது பீர்க்கங்காய்.
காய், கனிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோயற்ற வாழ்வுக்கு வழித் துணையாய் அமைகின்றன. உள்ளுறுப்புகளுக்கு ஊட்டம் தந்து உற்சாகத்துடன் செயல்படச் செய்கின்றன.
மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய ஒரு கொடி வகைத் தாவரம் பீர்க்கங்காய் ஆகும். ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் பெரும்பாலும் பயிரிடப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்காக மட்டுமின்றி நாருக்காகவும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.
பீர்க்கங்காயை மேற்றோலைச் சீவி வில்லைகளாக அரிந்துப் பொரியலாகவும், துவரம் பருப்பு/கடலைப்பருப்புச் சேர்த்துக் கூட்டமுதாகவும் செய்து அன்னத்துடன் கூட்டி உண்பர்… சீவப்பட்ட மேற்றோல் மிக இளசாக இருந்தால் அதை எண்ணெயில் வதக்கி, வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு ஆகியவற்றோடுச் சேர்த்து அரைத்துத் துவையலாகவும் சோற்றுடன் கூட்டி உண்பர்…இந்தக்காய்களின் முற்றிய நார் உடலை தேய்த்துக் குளிக்கும் பீர்க்கங்குடுவை-யாகப் பயனாகிறது.
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். முற்றிய பீர்க்கங்காயை சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.
பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்
நீரிழிவு நோய்
பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
இரத்த சோகை
இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
குளியலுக்கு
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
கண்பார்வை
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கண்நோய் நீங்க
சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
தோல் நோய்
பீர்க்கங்காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய் ஆக திகழ்கிறது.