‘ரெட் லிஸ்ட்’ நாடுகளில் இருந்து நுழைய முயன்ற 4 பயணிகளுக்கு பிரித்தானிய அரசு தலா 19,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.
ரெட் லிஸ்ட் எனப்படும் அதிக ஆபத்துள்ள 33 நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு பிரித்தானிய அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நாடு திரும்பும் பிரித்தானிய குடிமக்களும், புதிய விதிமுறைகளின்படி அவர்கள் ஹோட்டலில் பணம் செலுத்தி தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அதேபோல், பயண விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருந்தது. மேலும் புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வந்த 6 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம், மேலும் 4 பேர் சிகப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கான தரவுகளை அவர்கள் மறைக்க முயன்றுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு பிரித்தானிய அரசு அதிரடியாக தலா 19,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.
பிரித்தானிய சுகாதாரத் துறைத் தலைவர் மாட் ஹான்காக், சர்வதேச பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் நீண்ட கால சிறை மற்றும் கடுமையான அபராதம் ஆகியவை அடங்கும்.
ஹான்காக் தனது அறிக்கையில், “பயணிகள் இருப்பிட படிவத்தில் பொய் சொல்லி, கடந்த 10 நாட்களில் அவர்கள் சிவப்பு பட்டியலில் ஒரு நாட்டில் இருந்ததை மறைக்க முயன்றால், அவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.