தமிழகத்தில் பெற்ற மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட, தாதாபுரம் ஊராட்சி, ஆதிக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி கோபால்(54), இவரது மனைவி மணி கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி , இத்தம்பதிகளுக்கு பிரியா(15) என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
மணி மற்றும் கண்ணன் வெளியூரில் தங்கி வேலை பார்த்துவந்துள்ளனர், பிரியா அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
நேற்றிரவு பிரியாவுக்கும், கோபாலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது, இதனால் கடும் கோபத்தில் இருந்துள்ளார் கோபால்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோபால் தனது வீட்டின் முன் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
அருகில் வசிப்பவர்கள் வீட்டினுள் சென்ற பார்த்தபோது, அங்கு கோபாலின் மகள் பிரியா படுகாயத்துடன் இறந்து கிடந்ததும், அவர் அருகில் சிறிய கத்தி மற்றும் சுத்தியல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததும், விரைந்து வந்த அதிகாரிகள் இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கோபால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் என தெரிவித்துள்ளனர், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.