‘’ராகுல் அண்ணா..’’-கைகளை இறுக பிடித்து கண்ணீர் விட்ட கல்லூரிப் பெண்

by Lifestyle Editor
0 comment

ஒருநாள் தேர்தல் பிரச்சாரப் பயணமாக ராகுல்காந்தி நேற்று புதுச்சேரி மாநிலம் சென்றார். மீனவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் அவர் கலந்துரையாடினார்.

‘’அரசியலில் எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை நண்பராக கருதாவிட்டாலும் அவர்களும் எனக்கு உற்ற தோழர்கள் தான்’’என்று பேசிய ராகுல், ‘’என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால், அவரை கொன்றவர்கள் மீது எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை. அவர்களை மன்னித்து விட்டேன்.’’என்றார் உருக்கமாக.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த ‘புதிய தேசத்தின் புதுவைபெண்கள்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவிகள் மத்தியில் உரையாற்றினார் ராகுல்.

அப்போது அவர், ‘’என்னை சார் அழைக்க வேண்டாம். ராகுல் என்றே கூப்பிடுங்கள்’’என்றார்.

ராகுல் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவி, ‘’ராகுல் அண்ணா… ராகுல் அண்ணா..’’என்று ஒரு நோட் பேடினை எடுத்துக்கொண்டு மேடைஅருகே ஓடினார். அவரிடம் இருந்து நோட் பேடை வாங்கி ராகுல் கையெழுத்து போட ஆரம்பித்ததும், அந்த மாணவிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. துள்ளி துள்ளி குதித்தார். இதைப்பார்த்த ராகுல், அம்மாணவிக்கு கை கொடுத்தார்.

பாசத்தில் ராகுலின் கைகளை விடாமல் பிடித்து குலுக்கினார் அம்மாணவி. அப்போது மாணவியின் தலையில் பாசமாக கைவைத்து விடை கொடுத்தார் ராகுல். பிரிய மனமில்லாமலும், நெகிழ்ச்சியிலும் அந்த மாணவி கண்ணீர் விட, மேடையில் மண்டியிட்டு, மேடைக்கு கீழே நின்ற அந்த மாணவியை அருகே அழைத்து அரவணைத்துக்கொண்டார். அந்த மாணவியும் பாசமாக அரவணைத்துக் கொண்டார். போட்டோக்காரர்கள் அழைத்ததால், மாணவியிடம் சொல்லி கேமராவை பார்த்து சிரித்தார் ராகுல்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘’இது உண்மையான பாசம். ராகுல் அண்ணா… வெறும் வார்த்தை அல்ல..உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்வு’’ என்று பலரும் பதிவிட்டுவருகின்றனர்.

காங்கிரஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்த வீடியோவினை வெளியிட்டு, ’’புதுச்சேரியைச் சேர்ந்த இந்த இளம் மாணவர் காட்டிய வைராக்கியம் ஒரு விஷயத்தின் பிரதிபலிப்பாகும். இளம் இந்தியா மிகப்பெரிய ஆற்றலால் நிறைந்துள்ளது. உண்மையான தலைவர்கள் அதை அங்கீகரிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் மற்றும் நமது நாட்டின் செழிப்புக்கு காரணமாக இருக்கிறார்கள்’’என்று பதிவிட்டிருக்கிறது.

Related Posts

Leave a Comment