சிவப்புப் பட்டியலில் இல்லாத ஒரு நாட்டிலிருந்து வந்த நிலையிலும், ஒருவர் பிரித்தானியாவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட தன் தாயை கவனிப்பதற்காக பங்களாதேஷுக்கு சென்றுவிட்டு திரும்பிய முகமது முஸ்தபா (43), பிரித்தானியாவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இல்லை, அப்படியிருந்தும் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டதன் காரணம்? பங்களாதேஷிலிருந்து பிரித்தானியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால், முஸ்தபா துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் பிடிக்க வேண்டியிருந்திருக்கிறது.
அங்கே அவர் இரண்டு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்திருக்கிறார். அப்போது துபாயில் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார், அதற்காக அவர் 210 பவுண்டுகள் செலவிட்டுள்ளார்.
பின்னர், இரண்டு மணி நேரத்துக்குப் பின் துபாயிலிருந்து விமானம் ஏறிய முஸ்தபா, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வந்திறங்கியதும், அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவர் அதற்கு தயாராக இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பங்களாதேஷ் சிவப்புப் பட்டியலில் இல்லை என்றாலும், அவர் துபாயில் இரண்டு மணி நேரம் இருந்ததற்காக 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல், அதற்காக ஹொட்டலில் தங்குவதற்கு 1,750 பவுண்டுகள் கட்டணம் என்றதும் அதிர்ச்சியடைந்தூள்ளார் முஸ்தபா.ற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சினையும், நீரிழிவு பிரச்சினையும் உள்ள முஸ்தபாவின் இரத்த அழுத்தம், மேலும் அதிகரித்தது போல் இருந்துள்ளது அவருக்கு. அவரிடம் அவ்வளவு பணமும் இல்லை என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பி செலுத்தும் ஒரு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார் முஸ்தபா.
இப்போது, நம்மில் பலர் சுற்றுலா செல்வதற்காக எல்லாம் விமானப் பயணம் மேற்கொள்வதில்லை, மருத்துவ அவசரம் என்பது போன்ற விடயங்களுக்காகத்தான் பயணம் செய்கிறோம்.
அப்படியிருக்கும் நிலையில், மனோரீதியாக நாம் இந்த செலவு, கட்டாய தனிமைப்படுத்தல் இதற்கெல்லாம் தயாராக இருப்பதில்லை என்பதால், நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது என்கிறார் முஸ்தபா.
ஆக, பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர், தாங்கள் பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியல் நாட்டிலிருந்து பயணிக்கவில்லை என்றாலும், சிவப்புப் பட்டியல் நாடு வழியாக பயணித்தாலே தனிமைப்படுத்தப்படவேண்டியிருக்கும், அதற்காக பணமும் செலவழிக்கவேண்டியிருக்கும் என்பதை அறிந்திருப்பது நன்மை பயக்கும்.