கோவிட் -19 இன் தோற்றம் குறித்து விசாரிக்கும் உலக சுகாதார அமைப்பு குழுவிடம் முக்கிய தரவுகளை ஒப்படைக்க சீனா மறுத்துவிட்டது என்று அதன் உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2019 டிசம்பரில் வுஹான் நகரில் கண்டறிந்த முதல் 174 கொரோனா வழக்குகளின் மூல தரவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு சீன அரசாங்கத்திடம் கேட்டிருந்தது.
ஆனால், முதல் பாதிப்புகள் குறித்த ஒரு சுருக்கமான தரவுகள் மட்டுமே சீனா கொடுத்துள்ளதாகவும், மூல தரவுகளை கொடுக்க மறுத்துவிட்டதாகவும் WHO நிபுணர் குழுவின் உறுப்பினரான அவுஸ்திரேலிய தொற்று நோய் நிபுணர் டோமினிக் டுவயர் குற்றம் சாட்டியுள்ளார்
இந்த மூல தரவுகள் மிக முக்கியமானது என்று கூறியுள்ள அவர், ‘Line Listing’ என அழைக்கப்படும் மூல தரவுகளைக் கொண்டு முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு நோயாளிகள் என்ன பதிலளித்துள்ளனர் எனபதை அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு சீனா பதிலளிக்கவில்லை. இந்நிலையில், ஆரம்ப கட்டங்களிலிருந்து தரவுகளை WHO நிபுணர்களுக்கு கிடைக்குமாறு சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.