நாட்டின் பணக்கார கடவுளாக உருவெடுக்கும் அயோத்தி ராமர்… நன்கொடை வசூல் ரூ.1,000 கோடியை தாண்டியது

by Lifestyle Editor
0 comment

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான நன்கொடை வசூல் இதுவரை ரூ.1,000 கோடியை தாண்டி விட்டதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான நன்கொடை வசூல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15ம் தேதியன்று தொடங்கியது. இந்த நாடு முழுவதும் நடைபெறும் நன்கொடை வசூல் பணிக்காக 1.5 லட்சம் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் மற்றும் இதர தன்னார்வலர்களை அறக்கட்டளை நியமனம் செய்தது.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கான நன்கொடை வசூல் பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதுவரை ராமர் கோயில் கட்டுமான பணிக்காக திரட்டப்பட்ட நன்கொடை வசூல் ரூ.1,000 கோடியை தாண்டி விட்டதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்தது. இது தொடர்பாக அந்த அறக்கட்டளையில் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக தொடங்கப்பட்ட நன்கொடை வசூல் பணியின்போது பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் இதயத்திலிருந்து நன்கொடைகளை வழங்குகிறார்கள். வங்கிகள் (3 வங்கி கணக்குகள்) இன்னும் இறுதி கணக்கை வழங்கவில்லை என்றாலும், அது ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நன்கொடை வசூல் பணி தொடங்கிய முதல் 15 நாளில் அறக்கட்டளை ரூ.500 கோடி திரட்டியுள்ளது. அடுத்த 10 நாட்களில் ரூ.500 கோடி வசூலாகியுள்ளது. இம்மாதம் 27ம் தேதி முடிவடைய உள்ள இந்த நன்கொடை வசூல் பணி முடிவில் மொத்தம் சுமார் ரூ.2,000 கோடி திரட்டப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment