ராமருக்கு உதவ சிவன் எடுத்த அவதாரம்!

by Lifestyle Editor
0 comment

புராணங்கள் பல புதிர்களைக் கொண்டுள்ளது. இந்த கதைகள் பற்றி தற்போது பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவற்றைக் கூர்ந்து ஆராயும்போதுதான் அதில் உள்ள அர்த்தத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். வெறுமனே கதை என்று ஒதுக்குபவர்கள் கூட கற்றுக்கொள்ளப் பல விஷயங்கள் நம்முடைய புராணங்களில் உள்ளது.

ஆஞ்சநேயரின் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் கதையைப் பற்றிப் பார்ப்போம். ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா சிறு வயதில் குரங்கு ஒன்று தவம் செய்து வருவதைக் கண்டார். அந்த குரங்கின் மீது பழங்களைத் தூக்கி வீசி இடையூறு செய்தார். தவம் கலைந்து எழுந்த முனிவர், அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால் அந்தக் கனமே குரங்காக மாறிவிடுவாய் என்று சாபமிட்டுள்ளார்.

இதனால் கலங்கிய அஞ்சனா சாப விமோசனம் கேட்டுள்ளார். மனம் இறங்கிய முனிவர் ஒப்புக்கொண்டார். “தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் காதலன் தன்னை நேசிக்க வேண்டும். தனக்கு சிவபெருமானே மகனாக அவதரிக்க வேண்டும், அப்படி பிறந்ததுமே சாப விமோசனம் கிடைக்க வேண்டும்” என்றார். அதன்படியே நடக்கட்டும் என்று முனிவர் கூறிச் சென்றார்.

அதே நேரத்தில் கயிலையில் சிவபெருமான் ராமநாமத்தைச் சொல்லி ஜெபித்தபடி இருந்தார். இதனால் ஆச்சரியம் அடைந்த பார்வதி, உங்கள் நாமத்தை விட ராமநாமம் பெரியதா என்று கேட்டார். அதற்கு சிவன், “வரப்போகும் நாட்களில் ஒரு மனிதன் தர்மப்படி எப்படி வாழ வேண்டும் என்பதை உலகுக்கு உன் அண்ணன் (மகா விஷ்ணு) ராமன் என்ற பெயரில் பிறந்து காட்டப் போகிறார். அவருக்கு உதவியாக என்னுடைய 11வது ருத்ர ரூபத்தை எடுக்கப் போகிறேன்” என்றார்.

அஞ்சனா தனக்கு விதிக்கப்பட்ட சாபத்தின்படி காட்டில் ஒரு ஆடவனைக் கண்டதும் காதல் கொண்டு குரங்கு வடிவம் எடுத்தார். அதே நேரத்தில் அந்த ஆணும் குரங்கு வடிவம் எடுத்து, தன் பெயர் கேசரி என்றும் குரங்குகளின் அரசன் என்றும், தன்னால் நினைத்த நேரத்தில் மனித உருவெடுக்க முடியும் என்றும் கூறினார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. தன் சாப விமோசனத்துக்காக அஞ்சனா சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். அஞ்சனாவின் தவத்தால் மகிழ்ந்த சிவன் அஞ்சனாவுக்கு வரம் அளித்தார். அப்போது முனிவர் தனக்கு இட்ட சாபம் நீங்கும் வகையில் சிவனே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று கோரினார். சிவனும் அந்த வரத்தை அளித்தார்.

அயோத்தியில் பிள்ளை பிறக்க வேண்டி தசரத சக்ரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்தார். அக்னி தேவன் மனம் குளிர்ந்து பாயசத்தைக் கொடுத்து அதை தசரதன் மனைவிக்கு கொடுக்க சொன்னார். தசரதன் தன் மனைவி கௌசல்யாவுக்கு அந்த பாயசத்தை வழங்கும்போது சிவனின் கட்டளைப்படி அதில் சிறிதளவைக் கருடன் எடுத்துக்கொண்டு சென்று அஞ்சனாவிடம் வழங்கியது. அதை பார்த்த அஞ்சனா மிகுந்த மகிழ்ச்சியுடன் பாயசத்தைச் சாப்பிட்டார். அப்போது சிவபெருமானின் அருள் தனக்குள் இறங்குவதை அஞ்சனா உணர்ந்தார்.

கேசரி, அஞ்சனை தம்பதிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் குரங்கு வடிவதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனையின் சாபமும் நீங்கியது!

Related Posts

Leave a Comment