சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கான மருத்து கொரோனா பரவலைத் தடுப்பதாக ஒரு செய்தி வந்திருந்த நிலையில், தற்போது புழக்கத்திலுள்ள மற்றொரு மருந்தும் கொரோனா சிகிச்சையில் உதவுவதாக தெரியவந்துள்ளது.
உலகில் 107 மில்லியன் பேரை தொற்றி, 2.34 மில்லியன் பேரை பலிகொண்டுவிட்ட கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக, உலகம் முழுவதிலும் ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
ஒரு பக்கம் புதிதாக மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மருந்துகள் கொரோனாவுக்கெதிராக செயல்படுமா என்பதைக் கண்டறியும் ஆய்வும் நடந்துகொண்டே இருக்கிறது.
அவ்வகையில், வழக்கமாக ஆஸ்துமா பிரச்சினைக்காக பயன்படுத்தப்படும் மருந்து கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 90 சதவிகிதம் வரை குறைப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன், கொரோனா தொற்றியவர்கள் குணமடைவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் குறைவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Pulmicort என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் Budesonide என்னும் ஸ்டீராய்டு அடிப்படையிலான மருந்துதான் அது.
146 கொரோனா நோயாளிகளுக்கு, 28 நாட்கள் இந்த மருந்தை கொடுத்து ஆய்வு செய்ததில், இன்ஹேலர் மூலம் இந்த மருந்தை உட்கொண்டவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கான தேவை அல்லது அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை, மற்றவர்களைவிட 90 சதவிகிதம் குறைந்தது தெரியவந்துள்ளது.