பிப் 11 தை அமாவாசை: வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்… தவறாமல் தர்ப்பணம் கொடுத்துவிடுங்கள்!

by Lifestyle Editor
0 comment

முன்னோர்க்கு ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் தரலாம் என்றும் குறைந்தது மூன்று முறையாவது தர்ப்பணம் தர வேண்டும் என்றும் சொல்கிறது நம்முடைய வேதம். அதிலும் குறிப்பாக முன்னோர்க்குத் தர்ப்பணம் செய்ய சிறந்த நாட்களுள் ஒன்றாக இருப்பது தை அமாவாசை. இந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தை அமாவாசை வருகிறது.

பிப்ரவரி 10ம் தேதி நள்ளிரவு 1.29 மணிக்கு தொடங்கி 11ம் தேதி நள்ளிரவு 1.10 வரை அமாவாசை உள்ளது.

இன்றைய நாளில் விரதம் இருந்து முன்னோர்க்குத் தர்ப்பணம் கொடுக்கும் போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும் நம்முடைய வீட்டு வாசலில் நம்முடைய முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காகக் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதன் மூலம், குடும்பத் தகராறு, உடல் நலக் குறைபாடு, எதிர்மறை சிந்தனைகள், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்.

காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்கு முன்பு கொடுத்துவிடுவது நல்லது.

நாளைய தினம் வீட்டு வாசலில் கோலம் போட வேண்டாம். பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டாம்.

கிழக்கு முகமாக பார்த்தபடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படி தர்ப்பணம் கொடுக்க கறுப்பு எள் அவசியம். இதை யாரிடமும் கடனாக வாங்கக் கூடாது.

நீரிலிருந்து கொண்டு தரையிலும், தரையிலிருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக் கூடாது. தண்ணீரில் இருப்பவர்கள் தண்ணீரிலும் கரையில் இருப்பவர்கள் கரையிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்கும் வரை கடவுளுக்குரிய வழிபாடு உள்ளிட்ட எதையும் செய்யக் கூடாது. வீட்டில் பூஜை அறையில் விளக்கு கூட ஏற்றக் கூடாது.

பவானி கூடுதுறை, ராமேஸ்வரம், காசிக்கு நிகரான திருப்பூவனம், திருப்புல்லாணி, திருச்செந்தூர், திருவெண்காடு, திருக்கண்ணபுரம், கருங்குளம், திருச்சி அம்மா மண்டபம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கடையம், பநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயா வனம் உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

இன்றைய தினம் தர்ப்பணம் செய்வது, ஏழைகளுக்கு உணவு வழங்குவது, மாலையில் ஆலய தரிசனம் என அனைத்தும் பல நன்மைகளையும் புண்ணியங்களையும் பெறுத் தரும் என்பதால் மறவாமல் தர்ப்பணம் செய்துவிடுங்கள்!

Related Posts

Leave a Comment