“முதல்வர் பழனிசாமி ‘ரியல்’ ஹீரோ… ஸ்டாலின் ‘ரீல்’ ஹீரோ” – அமைச்சர் கடம்பூர் ராஜு!

by Lifestyle Editor
0 comment

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அனைவரும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் அரசியல் கருத்தை உதிர்ப்பது சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார். அதேபோல இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் 12,110 கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார்.

ஆனால் நாங்கள் சொல்வதை அதிமுக அரசு செய்கிறது என்று கூறி ஸ்டாலின் அரசியலாக்குகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்றால், மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைக் கூற வேண்டும். அதுவே அவரின் கடமை. குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் என்று திருவிளையாடல் படத்தில் ஒரு வசனம் வரும். அந்தப் புலவர்களைப் போலத் தான் ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் முதல்வர். எல்லாருக்கும் கொரோனா காலத்தில் முதல்வர் நிவாரணம் வழங்கினார். மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என்று யோசித்தார், உடனே மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் செய்து உத்தரவிட்டார். இப்போது மாணவர்களின் ஹீரோவாக முதல்வர் விளங்குகிறார்.

ஸ்டாலினால் திமுகவில் நிறைய பேர் நொந்து போய் உள்ளனர். சொன்ன வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியுள்ளதால், ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் ஸ்டாலின் உளறிக்கொண்டே இருக்கிறார். அவர் பேச்சில் தெளிவே இல்லை. “உங்கள் தொகுதியின் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுகவினர் செட்டப் செய்து ஆட்களைப் பேச வைத்து வருகின்றனர். இப்படியே செட்டப் செய்து ஸ்டாலின் நாடகம் நடத்த வேண்டியதுதான். அதனால்தான் சொல்கிறேன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘ரியல்’. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ‘ரீல்’ ” என்றார்.

Related Posts

Leave a Comment