சென்னை டெஸ்ட்: இந்தியாவை ஊதி தள்ளி அபார வெற்றிப்பெற்றது இங்கிலாந்து!

by Lifestyle Editor
0 comment

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 5ம் திகதி தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, 3வது நாள் வரை தொடர்ந்து விளையாடி முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நான்காவது நாளின் போது முதல் இன்னிங்ஸில் 337 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பாலோ ஆன் கொடுக்காமல் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, அஸ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்திய தரப்பில் பந்துவீச்சில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். நதீம் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

420 என்ற இமலாய இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் அவுட்டானார். ஷுப்மன் கில் (15), புஜாரா (12) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசி நாள் 381 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த 192 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.

ரோகித் சர்மா (12), ஷுப்மன் கில் (50), புஜாரா (15), கோஹ்லி (72), ரஹானே (0), ரிஷப் பண்ட் (11), வாஷிங்க்டன் சுந்தர் (0), ரவிச்சந்திரன் அஸ்வின் (9), சபாஷ நதீம் (0) பும்ரா (4) ஓட்டங்களில் அவுட்டாகினர். இஷாந்த சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், டொமினிக் பெஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட், 100வது டெஸ்ட் போட்டியில் வெற்றியையும் பதிவு செய்து பட்டையை கிளப்பியுள்ளார்.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப்பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ம் திகதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முதல் டெஸ்டில் வெற்றிப்பெற்றதில் விளைவாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 70.2 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா 69.2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.

 

Related Posts

Leave a Comment