திருமந்திரம் ( பாகம் 44 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 44 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஞான நூல் அறிவு

“நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்

பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்

கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே”                        பாடல் எண் 295

அறநூல்கள் கூறிய நெறிமுறைகளின்படி நடந்து, உயர்ந்த நிலை அடைய முடியாதவர்கள், மற்றைய இச்சைகளில் மனம் பற்றுக் கொள்ள, மனிதப் பிறவியின் பண்பு நலம் இழப்பார்கள். கோலெடுத்தால் ஒன்று படாது பறந்தோடும் பறவைகளைப் போல், இந்த உலகப் பற்றாளர்களும், மற்றப் பலவற்றில் மயக்கம் கொண்டு, தடுமாறுகின்றனர்.

ஞானச் சுடர் ஒளி

“ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்

தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்

ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு

வாய்ந்த மனமல்கு நூலேணி ஆமே”                             பாடல் எண் 296

ஞானக்கல்வி நன்கு அடையப் பெற்றவர்களுக்கு அகத்துள் சிவக்காட்சி தெரியும். உள்ளத்தில் தோய்ந்த சிவக்காட்சி தூய மணிபோல் ஒளிவீசித் திகழும். இப்படிச் சோதி ஒளியும், சிவக்காட்சியும் சித்திக்கப் பெற்றவர்களுக்குப் பக்குவப்பட்ட மனம் ஏணிபோல் இருந்து அவர்கள் மேன்மை அடையத் துணை செய்யும். (மனமாகிய நூலேணி பற்றி நெற்றி நடுவாகிய சந்திர மண்டலத்தை அடைதல் எனவும் எடுக்கலாம்)

ஞானத் துணை

“வழித்துணை யாய்மருந் தாய்இருந் தார்முன்

கழித்துணை யாங்கற் றிலாதவர் சிந்தை

ஒழித்துணை யாம்உம்ப ராம்உல கேழும்

வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே”                    பாடல் எண் 297

மெய்ஞான அறிவு பெற்ற மேன்மக்கள் பிறவித்துயரைப் போக்க வல்ல துணையாக, பிறவிப் பிணிக்கு மருந்தாக இருந்தார்கள். இந்த மெய்யறிவு பெற்றவர்களைத் துணை கொள்ளாதவர்கள், கற்றறிவு இல்லாதவர்கள், விலக்கி ஒதுக்கப்பட வேண்டியவர்களே! மனதைப் பற்றிய மல இருளை அழித்தொழிக்க வல்ல, வானுலகும், ஏழேழ் உலகங்களும் வணங்கி வழிபடும் பெருமைக்குரிய பேரறிவாளன் சிவபெருமான். ஆன்மாக்களை அருள்வழி நடத்தும் வழித்துணையாய் இருப்பவன்.

ஞானப்பற்று

பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்

முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்

கிற்ற விரகின் கிளர்ஒளி வானவர்

கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே’                             பாடல் எண் 298

பற்றிக் கொள்ளத்தக்க, பிடிப்பாகப் பற்றாக ஒன்று வேண்டும் என நினைத்தால், அது இறைவன் திருவருளைத் தவிர வேறில்லை. எனவே அதனையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். சிவன் அருள் பெற்றுவிட்டால் மற்றப் பற்றெல்லாம் முடிவடையும். சித்திகளில் வல்ல, தவ ஒளியில் திகழும் தேவர்கள் இந்த உண்மையை உணர்ந்தறிந்துள்ளனர். எனவேதான் அவர்கள் அழியாத பேரின்பப் பெருநிலை பெற்றுத் திகழ்கின்றனர்.

ஞானத் தலைவன்

“கடல்உடையான் மலையான் ஐந்து பூதத்து

உடல்உடையான் பல ஊழிதோறு ஊழி

அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்

இடம்உடை யார்நெஞ்சத்து இல்இருந் தானே”                     பாடல் எண் 299

விரிந்தகன்ற கடல்களுக்கு உரியவன், பெருமலைகளுக்கெல்லாம் உரியவன், ஐம்பெரும் பூதங்களையே (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தனக்கு உடலாகக் கொண்டவன், இந்த ஐப்பெரும் பூதங்களும், கடலும், மலையும் பெருகி, உடைத்து, மாறி மாறி உலகங்கள் தோன்றி மறைந்து தொடரும் ஒவ்வொரு ஊழியிலும் (யுகங்களிலும்) வலிமை பொருந்திய காளையின் மேலமர்ந்த பரம்பொருள், தங்களுடைய உள்ளத்தைத் தனக்கு இடமாகத் தந்தவர்கள் மனதைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருந்தான்.

கேள்வி கேட்டமைதல்

“அறம்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்

மறம்கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்

புறம்கேட்டும் பொன்னுரை மேனி எம்ஈசன்

திறம்கேட்டும் பெற்ற சிவகதி தானே”                            பாடல் எண் 300

அறநூல்கள் கூறுகின்ற நல்லுரைகளைக் கேட்டும், அறிவிற் சிறந்த பெரியோர்கள் கூறும் உபதேசம் அல்லது புத்திமதிகளைக் கேட்டும், நல்லது எது, தீயது எது, எவையெல்லாம் செய்வது பாவம் என்பதைக் கேட்டறிந்தும், தேவர்களின் மந்திர மொழிகளைக் கேட்டும், இவற்றிற்கெல்லாம் அயலாக, வேறாக உள்ளவற்றைக் கேட்டும், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொன்போல் மேனி உடைய சிவப்பரம்பொருளை, தேவர்களும் அறிய முடியாத பேரருள் திறத்தை அறிந்துகொண்டவர்க்கே சிவப் பேறு கிட்டும்.

ஞான யோகம்

“தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை

யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்

ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்

ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே”                              பாடல் எண் 301

தேவர்களுக்கு எல்லாம் தலைவனை, பேரழகும் பேரொளியும் பொருந்திய சிவப் பரம்பொருளை யார்தான் முழுவதுமாக அறிந்துணர்ந்துள்ளனர்? எனவே, அந்தப் பரம்பொருளை அறிய முயலுங்கள். அறிந்த பின் அவன் புகழை வாழ்த்தி வழிபடுங்கள். பெருமானின் திருநாமம் கேளுங்கள். செவி வழி கேட்டுப் புலன்வழி உணருங்கள். இப்படி அறிந்து தெளிந்து, ஓதி உணர்ந்து, கேட்டு மகிழ்ந்து, அவன் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, அவனைத் தியானித்து இருப்பவர்கள், சிவாநுபூதி பெற்ற உயர்ந்தோர் ஆவார்கள்.

Related Posts

Leave a Comment