தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி சென்னை போரூரில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், ” நான் சொல்வதை தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் நான் செய்வதை தான் அவர் சொல்கிறார். திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. கடைசி வரை திமுக சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமங்கள் எனக்கு தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு ” என்றார்.
முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன், நகை கடன் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஸ்டாலின் அறிவித்த ஒவ்வொரு திட்டங்களையும் தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறுவது திமுக ஆட்சிதான். அதிமுக ஆட்சி இல்லை என ஸ்டாலினும் , திமுகவினரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.