இந்திய அணி பந்து வீச்சை துவம்சம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்கள்! திணறிய தமிழக வீரர்கள்… 555 ரன்கள் குவிப்பு

by Lifestyle Editor
0 comment

சென்னையில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (128 ரன்) களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஜோ ரூட்டுடன், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜோடி போட்டு தொடர்ந்து விளையாடினார். சலனமற்ற இந்த ஆடுகளத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினார்.

அஸ்வின், ஷபாஸ் நதீமின் சுழலில் சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 31 மற்றும் 32 ரன்னில் முறையே கொடுத்த இரண்டு கடினமான கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். மதிய உணவு இடைவேளை வரை இந்த கூட்டணியை அசைக்க முடிவில்லை. அதற்குள் இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்புகளை இந்திய வீரர்கள் விரயமாக்கியது மட்டும் தான் மிச்சம்.

அணியின் ஸ்கோர் 387 ரன்களாக உயர்ந்த போது பென் ஸ்டோக்ஸ் (82 ரன், 118 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) நதீம் பந்து வீச்சை லெக்சைடில் விளாசிய போது புஜாராவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ஆலி போப்பும், ரூட்டுக்கு பக்கபலமாக நிற்க இமாலய ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து பயணித்தது.

அழுத்தமாக காலூன்றி இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஜோ ரூட், அஸ்வின் சுழலில் பிரமாதமான ஒரு சிக்சர் விரட்டி தனது 5-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

ஜோ ரூட்டுக்கு இது 100-வது டெஸ்டாகும். 100-வது டெஸ்டில் அவரையும் சேர்த்து மொத்தம் 9 வீரர்கள் சதம் அடித்திருக்கிறார்கள். ஆனால் 100-வது டெஸ்டில் ஒரு வீரர் இரட்டை சதத்தை சுவைப்பது இதுவே முதல் நிகழ்வாகும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைத்து விட்டார்.

சிறிது நேரத்தில் ஆலி போப் 34 ரன்னில் (89 பந்து, 3 பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். அடுத்த ஓவரிலேயே ஜோ ரூட்டும் (218, 377 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை இழந்தார். நதீமின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆன ரூட் அப்பீல் செய்தும் பலன் இல்லை.

ஆனாலும் கடைசி கட்ட பேட்ஸ்மேன்களும் கணிசமான பங்களிப்பை அளித்து அணியின் ஸ்கோரை சுலபமாக 500 ரன்களை கடக்க வைத்தனர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 30 ரன்களும், டாம் பெஸ் 28 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். இரண்டு நாட்கள் ஆகியும் சொந்த மண்ணில் எதிரணியை ஆல்-அவுட் செய்ய முடியாமல் இந்திய பவுலர்களின் திண்டாட்டம் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்து திடமான நிலையை எட்டியிருக்கிறது. உள்நாட்டில் இந்திய அணி 550 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா,பும்ரா, அஸ்வின், ஷபாஸ் நதீம் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 26 ஓவர்கள் வீசி 98 ரன்களை விட்டு கொடுத்த போதும் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

Related Posts

Leave a Comment