வைர நகைகளை பராமரிப்பது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில் இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள். தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் அதை போட்டுக்கொண்டு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்றவை செய்யக்கூடாது.

வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது. நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.

எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும். அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால் வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.

விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும். அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள் நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.

வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும் பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம் செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.

வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி. தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment