மின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன்! கடும் வியப்பில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்

by Lifestyle Editor
0 comment

எலெக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் இனம், தன் இரையை வேட்டையாட கூட்டாக சேர்ந்து மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் ஒன்றாக சேர்ந்து, தன் உடலில் இருக்கும் மின்சாரத்தை வெளியிட்டு, தன் இரையை தாக்குவதை அமேசான் வனப் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இது ஒரு அற்புதமான காட்சியாக இருந்ததாக ஆராய்ச்சியாளர் கார்லோஸ் டேவிட் டி சந்தனா தெரிவித்துள்ளார்.

இந்த எலெக்ட்ரிக் மீன்களிலேயே வோல்டாஸ் எலெக்ட்ரிக் ஈல் என்கிற வகையான மீன்கள் தான் அதிபயங்கரமான சக்தி கொண்டவை.

இந்த வகை மீன்களினால் 860 வோல்ட் மின்சாரத்தை வெளிப்படுத்த முடியும். உலகில் இருக்கும் விலங்குகளிலேயே அதிக அளவில் மின்சாரத்தை வெளிப்படுத்தும் உயிரினம் இதுதான். இந்த மீன்கள் 2 மீட்டர் நீளம் வரை வளரும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு பிரத்யேக பாகம் இந்த ரக மீன்களின் உடல்களில் இருக்கின்றன.

இந்த பாகம் ஆயிரக்கணக்கான மின்பகுபொருள்கள் (Electrocytes) எனப்படும் பேட்டரிகளை போன்ற அமைப்பினை கொண்டுள்ளது.

இந்த மீன்கள் தூண்டப்படும் போது, இந்த பாகத்திலிருந்து மின்சாரம் வெளிப்படுகிறது. அது ஈல் மீன்களின் உடல் முழுக்க பரவி வெளிப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் ஈல் மீன்களின் இந்த மின்சாரத்தை வெளிப்படுத்தும் உயிரியல் பண்புதான், மனிதர்களின் உடலுக்குள் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்களுக்கான (உதாரணம் பேஸ் மேக்கர்) மின்சார ஆதாரத்தை உருவாக்க உந்துதலாக இருந்தது.

பருவநிலை மாற்றம், காட்டுத்தீ, காடுகளை அழித்தல் போன்ற செயல்களால் எலெக்ட்ரிக் ஈல் மீன்களின் வாழ்விடம் மற்றும் வாழ்க்கை சூழல் கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றன என்று ஆராச்சியாளர் சந்தனா தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு பக்கம் அழிவு நடந்து கொண்டிருக்கும் வேளையில், இது மாதிரியான ஆராய்ச்சிகள், நமக்கு இன்னும் எவ்வளவு விடயங்கள் தெரியாது, எத்தனை உயிரினங்களின் வாழ்கை வரலாற்றை நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பதை கோடிட்டு காட்டுகிறது என்றும் சந்தனா குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment