ஐந்து நாள் துர்கா பூஜை முக்கியத்துவம்

by Lifestyle Editor
0 comment

துர்கா பூஜை, இது வங்காளிகளின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிய ஒரு மிக முக்கியமான திருவிழா ஆகும். இந்த திருவிழா அதீத உற்சாகத்துடன் மற்றும் ஆரவாரத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதே திருவிழா, நாட்டின் பிற பகுதிகளில் நவராத்திரி விழா மற்றும் தசரா பண்டிகையாக கொண்டாடப் படுகின்றது.

துர்கா பூஜையானது ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்த ஐந்து நாட்களின் ஒவ்வொரு நாளும் வெவ் வேறு பெயரில் அழைக்கப்பட்டு பூஜை புணஸ்காரங்களுடன் சிறப்பாக வங்காளிகளால் கொண்டாடப்படுகின்றது.

துர்கா பூஜை, இந்தியர்களின் மிக முக்கியமன ஒரு பண்டிகையாக விளங்குகின்றது. இந்தத் திருவிழாவின் பொழுது இறைவனை ஒரு தாயாக உருவகப்படுத்தி நாம் அனைவரும் வணங்குகின்றோம். இது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரும் பெரும் செயலாகும். இந்து மதத்தில் மட்டுமே இறைவனை அன்னைக்குச் சமமாக வைத்து வணங்குகின்றோம்.

இந்த உலகில் உங்களுக்கு வாய்த்த அனைத்து உறவுகளிலும், அம்மா என்கிற உறவு மட்டுமே உங்களுக்கு அபிமானம் மிக்கது அல்லது இனிமையானது. அதன் காரணமாகவே இந்து மதம் இறைவனை அன்னை வடிவத்தில் உருவகப்படுத்தியுள்ளது. அதிலும் இந்த துர்கா பூஜையின் பொழுது இறைவன் அன்னை துர்காவின் வடிவத்தில் வணங்கப்படுகின்றான். அன்னையே அனைத்திற்கும் மூல காரணம்.

அவளே இவ்வுலகின் ஆதாரம். இந்தத் தத்துவமே துர்கா பூஜையின் தாத்பரியமாக விளங்குகின்றது. அனைத்து உயிர்களிலும் வியாபித்து இருக்கும் அன்னையானவள் கருணை, ஞானம், மற்றும் செளந்தர்ய வடிவில் அனைத்து மனிதர்களிடம் வாழ்ந்து வருகின்றாள். படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல் போன்றவற்றிற்கு காரணகர்த்தாவாக விளங்கும் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் துணைவியும் அன்னையே.

அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னையை துர்கா பூஜையின் பொழுது நாம் வணங்கி நிற்கின்றோம். இந்தக் கட்டுரையில் துர்கா பூஜை கொண்டாடப்படும் 5 நாட்களின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதோடு மட்டுமல்ல ஒவ்வொரு நாட்களுடன் தொடர்புடைய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களைப் பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகா ஷஷ்டி

இந்த நாளில் அன்னை துர்கா ஒரு சிங்கத்தின் மீது ஏறி இந்தப் பூமியின் மீது வலம் வருகின்றாள். அன்னையுடன் அவளூடைய நான்கு குழந்தைகளான சரஸ்வதி, லட்சுமி, விநாயகர் மற்றும் முருகனும் உடன் வருகின்றார்கள். மகா ஷஷ்டி யின் பொழுது அன்னைக்கு கண் திறக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் விஷேஷ பூஜைகளான அமனோத்தரன், போதோன், மற்றும் அதிபாஷ் போன்றவை நடத்தப்படுகின்றன. இந்த நாளில் அனைவரும் ஒரு வகையான தாள வாத்தியமான தாக்கை மகிழ்ச்சியுடன் இசைத்து அன்னையின் வருகையை அனைவருக்கும் தெரிவிக்கின்றார்கள்.

மகா சப்தமி

மகா பூஜை இந்த நாளில் இருந்தே துவங்குகின்றது. இந்த நாளில் விடிவதற்கு முன்னர் ஒரு வாழை மரத்தை புனித நீரில் முக்கி எடுத்து, அதன் பின்னர அதற்கு புத்தாடை உடுத்தி புதிதாக திருமணமான பெண்ணைப் போல் அலங்காரம் செய்கின்றார்கள். அலங்கரிக்கப்பட்ட வாழை மரத்திற்கு “கொல பவ்” அல்லது “நபபத்திர்கா” என்று பெயர். கொல பவ் அதன் பின்னர் மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விநாயகரின் விக்கரகத்திற்கு அருகில் வைக்கப்படும். அதன் பின்னர் சகல ஆசாரியர்களும் நல்ல அதிர்ஷ்டம் வேண்டி அன்னை துர்காவை வழிபடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் அன்னையின் ஒன்பது வடிவங்களை குறிக்கும் ஒன்பது விதமான தாவரங்களும் மேடையில் வைக்கப்பட்டு போற்றப்படும்.

மகா அஷ்டமி

புனைவுகளின் படி மகா அஷ்டமி அன்று அன்னை துர்கா எருமைத் தலை அசுரன் மகிஷாசுரனை சம்ஷ்கரித்தாள். பழங்காலங்களில் ஒரு எருமை அரக்கத்தனம் முடிவுக்கு வந்ததை குறிக்கும் பொருட்டு அன்னையின் முன் சரணடைய வைக்கப்ப்டும். மக்கள் அன்னையைப் புகழ்ந்து சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட பாசுரங்களைப் பாடி அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நாளில் தான் “குமாரி பூஜா” மேற்கொள்ளப்படுகின்றது. குமாரி பூஜை அன்று, ஒன்பது அல்லது அதற்கு குறைவான வயதுடைய பெண் குழந்தை, அன்னை துர்காவாக உருவகப்படுத்தப்பட்டு அதீத பக்தியுடன் வழிபடப்படுகின்றாள். அன்றைய நாளின் சந்தி வேளையில் சாந்தி பூஜை கொண்டாடப்படுகின்றது. சாந்தி பூஜையானது மகா நவமி மற்றும் மகா அஷ்டமியின் இணைப்பை குறிக்கின்றது.

மகா நவமி

சாந்தி பூஜை முடிவடைந்தவுடன் மகா நவமி ஆரம்பிக்கின்றது. மகா நவமி பூஜை, மகா ஆரத்தியுடன் நிறைவடைகின்றது. அந்த நாளின் இறுதியில் எண்ணற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பல்வேறு துர்கா பூஜை குழுக்களின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். அதன் பிறகு நவமி போஜனம் விநியோகிக்கப்படும்.

மகா தசமி

துர்கா பூஜை கடைசி நாள் மகா தசமி ஆகும். இந்த நாளில் அன்னை துர்காவின் சிலை புனித கங்கை ஆற்றில் கரைக்கப்படும். இது துர்கா தேவி விசர்ஜனம் என்று அழைக்கப்படுகிறது. விசர்ஜன நாளில், அன்னை துர்கா அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு வீதிஉலாவாக அழைத்து வரப்படுகின்றாள். ஊர்வலத்தின் பொழுது அனைத்து மக்களும் ஆடிப் பாடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அனைத்து திருமணமான பெண்களும் ஒருவருக்கொருவர் குங்குமத்தை வீசி எறிந்து விளையாடுவார்கள்.

இது “சிந்தூர் கேளா” என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகின்றது. அன்னை துர்கா ஆற்றில் கரைக்கப்பட்ட பின்னர், அனைவரும் தங்களுடைய இல்லங்களுக்கு திரும்பி விடுவார்கள். அன்றைய தினத்தின் சாயந்தர வேளையில் மக்கள் அனைவரும் தங்களுடைய் நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று பிஜோய தசமி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். இந்த மகிழ்ச்சியான நேரத்தை கொண்டாட பல்வேறு விதமான இனிப்புகள் மற்றும் பலகார வகைகள் தயாரிக்கப்பட்டு பறிமாறப்படும்.

Related Posts

Leave a Comment