தமிழன் தினேஷ் கார்த்திக் தலைமையில் மிரட்டும் வீரர்கள்! மகுடம் சூடுமா தமிழக அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

by Lifestyle Editor
0 comment

முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழக அணியும் பரோடா அணியும் இன்றும் மோதுகிறது.

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், குஜராத் மாநிலத்திற்குட்பட்ட பரோடா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, தேவ்தார் தலைமையிலான பரோடாவை எதிர்த்து இன்றிரவு மல்லுகட்டுகிறது.

அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், முரளிவிஜய், விஜய் சங்கர், நடராஜன் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலைமையிலும் தமிழக அணி இந்த சீசனில் பிரமாதப்படுத்தியுள்ளது. தோல்வியே சந்திக்காமல் (7 ஆட்டத்திலும் வெற்றி) வீறுநடை போட்டு வரும் தமிழக அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியிருக்கிறது.

இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள ஜெகதீசன் (4 அரைசதத்துடன் 350 ரன்), பாபா அபராஜித், ஹரிநிஷாந்த், கேப்டன் தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான், அருண் கார்த்திக் என்று யாராவது ஒருவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் கைகொடுத்து அணியை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

2007-ம் ஆண்டில் கோப்பையை வென்றுள்ள தமிழக அணி கடந்த ஆண்டு ஒரு ரன்னில் கோப்பையை கோட்டை விட்டது. மறுபடியும் வாகை சூடுமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment