திருமந்திரம் ( பாகம் 43 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 43 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்

“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்

பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்

தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்

ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே”                          பாடல் எண் 288

இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.

தேவன் அருள் திருமஞ்சனம்

“விட்டுப் பிடிப்பதுஎன் மேதகு சோதியைத்

தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை

எட்டுமென் ஆருயி ராய்நின்ற ஈசனை

மட்டுக் கலப்பது மஞ்சன மாமே”                                பாடல் எண் 289

பேரருட் பெருஞ் சோதியாக இருக்கிற இறைவனை விட்டுப் பிடிப்பது என்பது நடக்கக் கூடியதா? பிடிக்குள் அகப்படும் பொருளோ பரமன்? எனவே நான் அவன் அருள் ஒளியைத் தொட்டுத் தொடர்வேன். அடி பற்றி வழி நடப்பேன். அதன் மூலம் அழியாப் பெருவாழ்வை நான் பெறுவேன். என் ஆருயிருள், உயிருக்குயிராய்க் கலந்து, என்னுள் இருக்கின்ற ஈசனோடு இரண்டறக் கலப்பதன் மூலம், நான் அவன் அருள் வெள்ளத்தில் அமிழ்ந்து மூழ்குவேன்.

கல்வி

“குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்

செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை

மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்

கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே”                            பாடல் எண் 290

இந்த உலகில் உடல் பெற்று வந்ததன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். உயிர் உடலில் பொருந்தி நிறைந்துள்ளதையும் உணர்ந்தேன். இதனால் தேவர் தலைவனான தேவாதி தேவன் சிவபெருமான், தடையேதுமின்றி, என்னுள்ளத்தில் குடிபுகலானான். நானும் விளக்கிச் சொல்ல முடியாத அனுபவ அறிவாகிய ஞானத்தைப் பெற்றேன்.

ஞானக் கண்

“கற்றறி வாளர் கருதிய காலத்துக்

கற்றறி வாளர் கருதிலோர் கண்ணுண்டு

கற்றறி வாளர் கருதி உரைசெய்யும்

கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே”                            பாடல் எண் 291

மேலான கல்வி அறிவு அடையப் பெற்றவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்தால், அவர் நினைவில் ஞானக் கண் ஒன்று உள்ளது என்பதை உணர்வார்கள். இதனை உணர்ந்த கற்றறிவாளர்கள் தாங்கள் அடைந்த அனுபவஞானமாகிய கல்வியை மற்றவர்களுக்கும் விளக்குவார்கள். இப்படி அவர்கள் விளக்கிக் காட்ட, அப்படியொரு கண், அகக் கண் இருப்பதை அயலவரும் அறிவார்கள்.

ஞான மணி விளக்கு

“நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்

கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்

சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்

மற்றொன் றிலாத மணிவிளக்(கு) ஆமே”                         பாடல் எண் 292

உயிர் உடலில் இருக்கும் போதே, உலகில் உயிரோடும் உணர்வோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, அழிவற்ற என்றும் நிலையாய் இருக்கின்ற இறைவனை உணர்ந்தறியும் கல்வியைக் கற்க முயற்சி செய்யுங்கள். செய்தால் பாவங்கள் பறந்தோடிப் போகும். மனம் ஒன்றி வழிபடுங்கள் ஈசனை. இப்படி வழிபாடு செய்வோர் ஒப்பரிய சோதி ஒளியாகிய ஞானவிளக்கொளி காணப்பெறுவர்.

 

ஞான ஒளி உடம்பு

“கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்

பல்லி யுடையார் பாம்பரிந்(து) உண்கின்றார்

எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை

வல்லியுள் வாதித்த காயமும் ஆமே”                            பாடல் எண் 293

மெய்யறிவாகிய உண்மைக் கல்விஞானம் கைவரப் பெற்றவர்கள், அறியாமையால் வரும் துன்பத்தை விட்டு விலகிப் போகின்றனர். உலகியல் இன்பங்களில் ஆசை வைத்தவர்கள், உள்ளொளி ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளாது, அதை வீணடித்துவிட்டு வெறும் உடலுக்கு, நாவுக்குச் சுவையான உணவைத் தேடி அலைகின்றனர். எனவே இரவும், பகலும் இறைவனை எண்ணித் துதியுங்கள். இப்படிச் செய்தால் உருக்கி ஊற்றிய பொன்போல் அழியாத் தவஞான உடல் பெறலாம்.

ஞானக் கல்வி

“துணைஅது வாய்வரும் தூயநற் சோதி

துணைஅது வாய்வரும் தூயநற் சொல்லாம்

துணைஅது வாய்வரும் தூயநற் கந்தம்

துணைஅது வாய்வரும் தூயநற் கல்வியே”                       பாடல் எண் 294

இறைவனை நம்பித் தொழுபவர்களுக்கு, அவனுடைய அருளாகிய ஒளியே துணையாக வரும். இறைவனுடைய திருப்பெயரே அவருக்குத் துணையாக நிற்கும். ஞானமாகிய கல்வியின் நறுமணம் அவர்களுக்குத் துணையாக வந்துதவும். இவ்வளவு துணைக்கும் துணையாக தோள் கொடுத்து உதவுவது அவர்கள் பெற்ற மெய்யறிவே அதாவது ஞானக் கல்வியே.

Related Posts

Leave a Comment