இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பதவி நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை

by Lankan Editor
0 comment

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உடனடியாக, விரிவாக பக்கசார்பற்ற விசாரணைகளை முன்வைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பெச்சலட் தமது வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட கால வழக்குகளுக்கு பொறுப்புக்கூறும் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் மிச்செல் பெச்சலட் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றாற்போன்ற புதிய சட்டம் மாற்றீடு செய்யப்படும் வரை கைது நடவடிக்கைகளில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தடை விதிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி பொது மன்னிப்பு போன்ற விடயங்களிலும் தரமான நடைமுறைகளை அமுல்படுத்துமாறும் அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை முடக்குவதுடன், பயணத்தடை போன்ற தடைகளை விதிப்பது தொடர்பில் ஆராயுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பு தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பீடு செய்யுமாறு ஐ.நா-வின் ஏனைய நிறுவனங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment