மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : ராஜா முத்தையா கல்லூரி மாற்றம்!

by Lifestyle Editor
0 comment

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் பிற அரசு கல்லூரிகளை காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய மாணவர்கள், அதை மாற்றக் கோரி கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராடினர்.

போராட்டம் காரணமாக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்களுடன் நடத்தப்பட்ட 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, முதுநிலை மாணவர்கள் இளநிலை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து நூதன போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா கல்லூரி கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது துணை முதல்வர் ஓபிஎஸ் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment