இலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல்

by Lifestyle Editor
0 comment

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தமுயன்ற 4 டன் விராலி மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைதுசெய்தனர்.

இலங்கையில் விராலி மஞ்சளுக்கு தேவை அதிகரித்துள்ளதால், தமிழகத்தின் ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக மஞ்சள் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் மஞ்சள் கடத்தப்பட உள்ளதாக, கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கோவளம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த லாரியை துரத்திச்சென்று பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியின் உள்ளே இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து லாரியில் இருந்த சுமார் ஒன்றரை டன் அளவிலான மஞ்சள் தூள், 2 டன் விராலி மஞ்சள் மற்றும் 200 கிலோ ஏக்காய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை கடத்திய தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், சாயர்புரத்தை சேர்ந்த அரிச்சந்திரன், ஜெபமணி உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்தனர்.

தொடந்து, பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் கைதானவர்களை முத்தையாபுரம் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் மஞ்சள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment