பண்ருட்டியில் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 3 இளம் பெண்களை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சில கிராமங்களில் தைப் பொங்கல் முன்னிட்டு தொடர்ந்து 13 நாட்கள் கன்னித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனால் பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் கன்னித்திருவிழாவில் நேற்று 11-ம் நாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த கன்னித்திருவிழா பூஜையில் பங்கேற்ற 7 இளம்பெண்கள் அரசடிக்குப்பம் சித்தேரி ஏரியில் (சம்பிரதாய வழக்கப்படி) நீரில் இறக்கி விடப்பட்டனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு இத்திருவிழாவிற்கு வந்த ஏ.புதூரைச் சேர்ந்த லட்சுமிபூபதி மகள்கள் நந்தினி (18), வினோதினி (16) மற்றும் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி (19) ஆகியோர் ஏரியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இந்த 3 பேரும் ஏரி நீரில் சிக்கிக் கொண்டனர். உயிருக்கு போராடிய இவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் உதவியுடன் 3 பேரின் உடலை நீரிலிருந்து மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னித்திருவிழாவில் ஏரியில் மூழ்கி 3 இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.