பெண்கள் எரிச்சலடையும் விஷயங்கள்

by Lifestyle Editor
0 comment

வீடுகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போதும் ஆண்களிடமே இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகளில் தங்கள் கருத்துக்களுக்கு கணவர் மதிப்பளிப்பதாக 70 சதவீத பெண்கள், சமீபத்திய சர்வே ஒன்றில் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் குடும்ப நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பு தங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலைதருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது.

‘திருமணத்திற்கு முன்பே காதல் அனுபவம் உண்டுமா?’ என்ற கேள்வியும் இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. முன்பு பெண்களிடம் இந்த கேள்வியை கேட்டால் ‘பதிலளிக்க விரும்புவதில்லை’ என்று கூறி நழுவிவிடுவார்கள். இப்போது பெண்கள் அந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.

பிரபல நிறுவனம் ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கும் இந்த சர்வேயில், 38 சதவீத பெண்கள் ‘தங்களுக்கு காதல் அனுபவம் உண்டு’ என்று சம்மதித்திருக்கிறார்கள். இதை கணவரிடம் சொன்ன பெண்களில் 88 சதவீதத்தினருக்கு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது. அவர்கள் ‘கணவர் சண்டைபோடும் போதெல்லாம் அதையே கூறி தங்களை குற்றவாளி போன்று கருதுவதாக’ கூறியிருக்கிறார்கள். ‘அதனால் பெண்கள் யாரும் தங்கள் பழைய காதல் அனுபவங்களை கணவரிடம் கூறக்கூடாது’ என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

‘கணவர் தங்கள் செல்போனை பரிசோதிப்பதுண்டு’ என்பது 57 சதவீத பெண்களின் ஆதங்கமாக இருக்கிறது. அதில் 32 சதவீத பெண்கள் ‘அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்றும், தங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் கணவர் புரிந்துகொள்ள அது உதவும் என்பதால் கண்டுகொள்வதில்லை என்றும்’ கூறியிருக்கிறார்கள்.

‘உங்கள் மனைவிக்கு பிரச்சினைக்குரிய விதத்தில் இன்னொரு ஆணுடன் தொடர்பு இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, 80 சதவீத ஆண்கள் ‘மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்கள். இதே விஷயத்தை பெண்களிடம் கேட்டபோது, 90 சதவீத பெண்கள் ‘கணவருக்கு அப்படி ஒரு தொடர்பு இருந்தாலும் அவரை திருத்த முயற்சிப்போம்’ என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ‘தாம்பத்ய திருப்தி’ விஷயத்தில் பெண்களின் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தங்களை திருப்திப்படுத்தும் பொறுப்பு கணவரை சார்ந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ‘திருப்தி குறைபாடு ஏற்பட்டால் கணவரிடம் அதை சுட்டிக்காட்டுவதாக’ 32 சதவீத பெண்கள் அதிரடி காட்டுகிறார்கள். ‘தாம்பத்ய உறவில் தாங்களே ஆதிக்கம் செலுத்துவதாக’ 15 சதவீத பெண்கள் பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரியது என்று செக்ஸாலஜிஸ்டுகள் குறிப்பிடுகிறார்கள். ‘இப்போது பாலியல் அறிவு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. அது அவர்களிடம் மிகுந்த விழிப்புணர்வை தோற்றுவித்துள்ளது. ஆண்கள் இதில் எதை எல்லாம் அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்களோ அவைகளில் எல்லாம் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். திருப்தி, உச்சகட்டம் போன்றவைகளை பற்றி அவர்கள் கணவருடனும் உரையாடுகிறார்கள். இது வரவேற்கத் தகுந்தது. சமூகத்தில் இது நல்ல மாற்றங்களை உருவாக்கும்’ என்று கூறுகிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், குழந்தை பிறந்த பின்பு பெரும்பாலான பெண்களிடம் தாம்பத்ய ஆர்வம் குறைந்து வருவதை இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது. ‘குழந்தை பிறந்த பின்பு இயல்பாகவே தாம்பத்ய உறவின் மீதான ஆர்வம் குறைந்துவிடுவதாக’ 62 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.

Related Posts

Leave a Comment