கொரோனா பரிசோதனை மையம் தீக்கிரை… பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு: ஐரோப்பிய நாடுகளில் வியாபிக்கும் வன்முறை

by Lifestyle Editor
0 comment

நெதர்லாந்தில் கும்பல் ஒன்று கொரோனா பரிசோதனை மையத்தை தீக்கிரையாக்கியதுடன், மருத்துவமனை ஒன்றிலும் பட்டாசுகளை கொளுத்தி வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக பல ஐரோப்பிய நாடுகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், நெதர்லாந்தில் இருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்டர்டாமிலிருந்து வடகிழக்கில் 50 மைல் தொலைவில் உள்ள உர்க்கிலிருந்து இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் திரண்டு, இப்பகுதியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை தாக்கியதுடன், தீக்கிரையாக்கியுள்ளனர்.

நெதர்லாந்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதன் முறையாக உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி முதல் விடிகாலை 4.30 மணி வரை ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை மையம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் கண்டிப்பாக ஏற்க முடியாது என அதிகாரிகளும் பொலிஸ் தரப்பும் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, அடுத்த வாரம் முதல் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, டென்மார்க்கில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் Mette Frederiksen-ன் உருவ பொம்மையை எரித்த சம்பவத்தில் இருவர் கைதாகியுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தலைநகர் மாட்ரிட்டில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் சுமார் 3,600 பேர்களுக்கு கொரோனா ஊரடங்கை மீறியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment