ஜாதிக்காரனுக்குத்தான் ஓட்டா? கமல் ஆவேசம்

by Lifestyle Editor
0 comment

நாளை நம் தேசிய வாக்காளர் தினம். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது. தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.
முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம் என்கிறார்.

அவர் மேலும் இதுகுறித்து, ’’ஜனநாயகத்தின் அடிப்படை மக்கள் பங்கேற்பு. அது வாக்களிப்பதில் இருந்தே துவங்குகிறது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலை உலகமே உற்று கவனித்தது. ஆயிரக்கணக்கான மதம், மொழி, ஜாதி, பண்பாடு என வேற்றுமைகள் பரவிக்கிடக்கும் இந்த நாடு ஜனநாயகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது உலகின் கேள்வியாக இருந்தது.

அந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு சவால்கள் காத்திருந்தன. உள்கட்டமைப்புகள், சாலைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலம் அது. பல இடங்களுக்கு வாக்குப்பெட்டிகள் படகிலும் மாட்டு வண்டிகளிலும் கொண்டு செல்லப்பட்டன. சில மலைப் பகுதி கிராமங்களில் வாக்குப்பெட்டிகள் ஹெலிகாப்டரில் இறக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் விட ஒரு பெரிய சவாலாக இருந்தது அன்றைய இந்தியாவில் சில இன குழுக்களில் பலருக்கு தனித்தனி பெயர்கள் கிடையாது. ஒரு குழுவாக அறியப்பட்டார்களே தவிர தங்களுக்கு என்று தனிப் பெயர்கள் இல்லாமல் இருந்தனர். அதிகபட்சம் நெட்டையன், குட்டையன், கருப்பன் எனும் அடையாளச் சொல் தான் இருக்கும். தேர்தல் ஆணையம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர்கள் அளித்து வாக்களிக்கச் செய்தது வரலாறு’’என்கிறார்.

அவர் மேலும், ‘’இந்தியாவில் தனி மனிதர்களுக்கான அந்தஸ்தையும் அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் ஜனநாயகம் தான் முதன் முதலில் உருவாக்கியது. இன்றும் நம்மில் பலர் தங்களை சுதந்திர மனிதனாக உணர்வதில்லை. எங்க ஜாதிக் காரனுக்கு தாங்க என் ஓட்டு. வேட்பாளர் எங்க கோவில் வரிக்காரன்… அவருக்குத்தான் ஓட்டு. நாங்க பரம்பரை பரம்பரையா இந்த கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்றெல்லாம் முடிவெடுப்பது ஒரு இனக்குழு மனோபாவம்தான். ஒருவகையில் கொத்தடிமை மனோபாவமும் கூட’’என்கிறார்..

’’வேட்பாளர் யார்? அவரது தகுதி என்ன? அவர் செய்து வந்த தொழில் என்ன? கடந்த காலங்களில் அறம்சார்ந்த மனிதனாக வாழ்ந்து இருக்கிறாரா? அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறதா? தொகுதி மேம்பாட்டிற்கு அவரது திட்டங்கள் என்ன? இதையெல்லாம் பரிசீலிக்காமல் ஜாதி, மத, அரசியல் அடையாளங்களை வைத்து வாக்களிப்பது ஜனநாயகத்தை வீழ்த்தும் செயலன்றி வேறல்ல’’ என்கிறார்.

’’சாதி பார்த்து வாக்களிக்காதீர்கள். சாதிப்பவனா என்று மட்டும் பாருங்கள்’’ என்ற வேண்டுகோளை முன் வைக்கும் கமல், ’’ ஊழல் அரசியல்வாதி தன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கிறான் குறைந்தபட்சம் 10 தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கிறான். சேர்த்த சொத்துக்களை காக்க தன் வாரிசுகளையும் அரசியலுக்கு கொண்டு வருகிறான்.

ஒரு ஊழல் பேர்வழி தன் குடும்பத்தை பற்றி யோசிக்கும் போது நீங்கள் ஏன் உங்கள் குடும்பத்தை பற்றி உங்கள் சந்ததிகளை பற்றி யோசிக்காமல் இருக்கிறீர்கள்?’’என்று கேட்கும் கமல்,

இந்த தமிழகத்தை சீரமைத்து நம் சந்ததியினரிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. அதை செய்ய நாம் தவறினால் வரும் காலம் நம்மை மன்னிக்கவே மன்னிக்காது முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம். நாளை நமது’’என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment