தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து புது பானையில் மக்கள் சூரிய பகவானை வழிபடுகின்றனர். இந்த பொங்கல் பண்டிகை, இனிதே நன்னாளாக அமைய அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான். அதிலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தனி சிறப்பு.
இன்று காலை 8 மணிக்கே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி விட்டது. அரசின் அறிவுறுத்தலின் படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை முழுவதுமாக பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதனைக் காண, ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிந்து தற்போது இரண்டாம் சுற்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது. களத்தில் சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் அடக்கி வருகின்றனர். வீரர்களுக்கு சைக்கிள், பட்டுப்புடவை, சில்வர் பானை உள்ளிட்டவை பரிசாகப்படுகிறது.
பெரும்பாலும் மாடுகளே போட்டியில் வெற்றி பெறுகின்றன. தற்போது களமிறங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் காளை, வீரர்கள் பிடியில் சிக்காமல் சீறி பாய்ந்து வென்றது குறிப்பிடத்தக்கது.