சென்னையில் 7ம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா..

by Lifestyle Editor
0 comment

சென்னை: உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு சார்பாக நேற்று சென்னையில் ஏழாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு சார்பாக சென்னை அம்பாசிடர் பல்லவாவில் நேற்று (11ம் தேதி) ஏழாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் ரவிபாரதி , திரைப்பட பாடகர் மக்கள் இசை பாடகர் செந்தில் ராஜலட்சுமி மற்றும் கிராமிய பாடகர் சின்னப்பொண்ணு ஆகியோர் கலந்துகொண்டு தமிழருடைய பண்பாட்டுப் பெருமைகளை எல்லாம் பாடலாகவும் எடுத்துச்சொல்லியும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பரதம் கரகாட்டம்

இவ்விழாவில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பரதம், கரகாட்டம் ஒயிலாட்டம் என பல்வேறு பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக நடராஜா நாட்டிய பள்ளி மாணவிகள், ஸ்ரீ பரத நாட்டிய பள்ளி மாணவிகள் , லயோலா மாற்று ஊடகம் சார்பாக பறையிசை, கரகாட்டம், ஒயிலாட்டங்கள் நடத்தப்பட்டது.

அலங்கார அணிவகுப்பு

ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி மாணவிகள் தமிழர் பாரம்பரிய நடனம் என சிறப்பாக நடந்தது. ட்ரீம் ஜோன் நந்தா அவர்கள் ஒருங்கிணைத்த தமிழர் பண்பாட்டு ஆடை அலங்கார அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது .

தமிழ் உறவுகள்

இவ்விழாவில் பேசிய ராதாரவி அவர்கள் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக உலகமெங்கும் இருக்கிற தமிழர் பிரதிநிதிகளை அழைத்து சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட தமிழர் திருநாள் விழா இன்று 7வது ஆண்டு விழாவாக நடைப்பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் உலகமெங்கும் இருக்கிற தமிழர் பிரதிநிதிகளை எல்லாம் பார்க்கிற பொழுது நம் தமிழ் உறவுகளை பார்க்கிற ஒரு பெருமகிழ்ச்சி இருக்கும்.

20 நாடுகள்

இந்த ஆண்டு கொரானா காரணத்தினாலேயே இந்த அளவிற்கு நடத்த முடியுமா என்று இருந்த நிகழ்வில் இன்று மிகச் சிறப்பாக தமிழகத்தில் இருக்கிற தமிழர்கள் எல்லாம் அழைத்து இந்த நிகழ்ச்சியில் நடத்தி ஏறக்குறைய 20 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிற நமது உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமாரை மனதார பாராட்டுகிறேன். எத்தனையோ மொழி இருந்தாலும் தமிழ் மொழிக்கு தனி சிறப்பு உண்டு. நாம் தமிழர்களாய் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய ஒரு செய்தி. நமக்கென்று தனி நாகரிகம் பண்பாடு வளர்ச்சி இருக்கிறது. இந்த கலை நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்து நான் பெருமிதம் கொள்கிறேன்.

உணவு உடை

இந்த நிகழ்ச்சியை பார்க்கிற அனைவரும் தமிழர்களுடைய பாரம்பரிய உணவு உடை போன்றவற்றை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்த முன்வரவேண்டும். இனி எல்லா இடங்களிலும் தமிழர்கள் வேட்டி கட்டி விழாக்களை சிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் தமிழருடைய வாழ்வாதாரம் குறிப்பாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடையும். பல்வேறு நெருக்கடிகளில் இருப்பினும் இந்த ஏழாம் ஆண்டு தமிழர் திருநாள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பிற்கும் அதன் தலைவருக்கும் பாராட்டுக்களும் நன்றி என்றார். இறுதியாக ஊடக பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் நன்றி உரை ஆற்றினார்.

Related Posts

Leave a Comment