குஜராத், உத்தரகாண்ட் உட்பட 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல்

by Lifestyle Editor
0 comment

டெல்லி: குஜராத், உத்தரகாண்ட் உட்பட நாட்டின் 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீர்நிலைகளுக்கு அருகில், உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் தடுப்பூசிகள் நாடு முழுவதும் வரும் 16-ந் தேதி போடப்படுகிறது.

இதனிடையே திடீரென பறவைக் காய்ச்சல் தொற்றும் பரவி வருகிறது. இதுவரை குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குஜராத்தில் காகங்கள், புறாக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. குஜராத்தின் வதோதராவில் இறந்த காகங்களின் உடற்பாகங்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் காரணமாக அவை இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 13 மாவட்டங்களில் 2,950 பறவைகள் உயிரிழந்துள்ளன. இதில் 2,200 காகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பலோட் மாவட்டத்தின்‌ வன பறவைகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் தொற்று ஏற்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள் கேரளாவில் ஆய்வு நடத்தியது. இதனைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. மேலும் நீர்நிலைகளுக்கு அருகில், உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Posts

Leave a Comment