இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி – மத்திய அரசு டெல்லி: இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கொரோனா பரவலை முற்றிலும் நிறுத்த பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே ஒரே நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.

இதனால் பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதலும் அளித்துள்ளன. அதன்படி அந்நாடுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ள.

16ஆம் தேதி தொடக்கம்

இந்நிலையில், இந்தியாவில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

யாருக்கு முன்னுரிமை

முதல்கட்டமாக நாடு முழுதும் உள்ள மூன்று கோடி சுகாதார பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கும், அதன் பின்னர் மற்றவர்களுக்கும் தடுப்பூசி திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீரம் தடுப்பூசி

முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவில் சீரம் மற்றும் பாரத்பயோடெக் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகின்றன. இந்தத் தடுப்பூசி மூன்று கட்ட சோதனைகள் முடிந்து பயன்படுத்த தயாராகவுள்ளது.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின்

அதேபோல, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய கோவாக்ஸின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதித்தது. மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்னரே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பலரும் மத்திய அரசின் முடிவை விமர்சித்தனர். கோவாக்சின் தடுப்பூசிக்கு சோதனைக்கே அனுமதி அளிக்கப்படுவதாகவும் மக்களின் ஒப்புதலுக்கு பிறகே அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் கூறியிருந்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18,222 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே நான்கு லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 228 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 835ஆக உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment