சர்வ பாபங்களும் நீங்க வருதினி ஏகாதசி விரதம்

by Web Team
0 comment

துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.

எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, அவர்களது துரதிஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அளவில்லா சௌபாக்கியம் கிட்டும் என ஞான நூல்கள் கூறுகின்றன. இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஹே யுதிஷ்டிரா !! இவ்விரதத்தினை கடைபிடிப்பதனால் மனிதர்களின் சர்வ பாபங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கதில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.
இந்த வருதினி ஏகாதசியின் புண்ணிய பிரபாவத்தினால் ராஜா மாந்தாதா சுவர்க்க ப்ராப்தி அடைந்தார். சிவபெருமானின் சாபத்தினால் குஷ்டரோகியான இக்ஷ்வாகு குல அரசன் துந்துமாரா இவ்விரத மேன்மையால் அதிலிருந்து விடுபட்டு சுவர்க்க ப்ராப்தி பெற்றார்.

ஒரு மனிதன் 10,000 ஆண்டுகள் தவம் செய்வதால் கிடைக்கும் புண்ணியமும், கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் ஸ்வர்ண தானம் செய்வதினால் கிடைக்கும் புண்ணியத்திற்கு இணையானது. ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து இக,பர சுகங்களையும், முக்தியையும் தர வல்லது இந்த வருதினி ஏகாதசி விரதம்.

ஹே குந்தி மைந்தா !! சாஸ்திரங்களில் குதிரை தானத்தை விட யானை தானம் மேலானது எனவும், அதை விட பூமி தானம் மேலானது எனவும், அதை விட எள் தானம் மேலானது எனவும், அதை விட ஸ்வர்ண தானம் மேலானது எனவும், தான,தர்மங்கள் பற்றி கூறுகையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட விசேஷமானதும், மிகவும் ஸ்ரேஷ்டமானது அன்னதானம் ஆகும் என்று கூறியுள்ளனர். ஏனெனில், அன்னதானம் தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருக்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்க வல்லது என்றும் கன்யா தானம் அன்னதானத்திற்கு இணையானது.

மேலும், கன்யா தானம், கோ தானம், வித்யா தானம் ஆகியவற்றால் கிட்டும் புண்ணியங்கள் அனைத்தும் வருதினி ஏகாதசி விரதத்தால் மட்டுமே கிடைக்கப் பெறலாம் என்றார்.

மேலும் அவர், தன் உணர்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் அடையாளம். எல்லா நடவடிக்கைகளிலும், கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல் சுகம் மற்றும் சௌபாக்கியத்திற்கு வளர்ச்சி அளிக்கும். இல்லையெனில் ஒருவர் செய்யும் பூஜை, பக்தி இவையனைத்தும் சக்தி இழந்து விடும் என்றார்.

ஹே யுதிஷ்டிரா !! எனவே இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, இறுதியில் சுவர்க்க பிராப்தியும் அடையப் பெறுவர்.

மேலும், இந்த ஏகாதசி விரத புண்ணியமானது, புண்ணிய நதியான கங்கையில் நீராடினால் கிடைக்கும் பலனை விட பன்மடங்கு மேலானது என்றார்.

அத்துடன், எவரொருவர் இந்த புண்ணிய நன்னாளில் இந்த ஏகாதசி விரத மகாத்மியத்தை சிரவணம் செய்கிறாரோ அவர் 1000 கோ தானம் செய்த பலனை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறியதாக பவிஷ்ய புராணம் விவரிக்கின்றது.

Related Posts

Leave a Comment