அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் : துப்பாக்கிச் சுட்டில் பெண் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கட்டடத்தினுள் நுழைந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அதனை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அவையில் இருந்தனர்.

அதேநேரத்தில், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஜோ பைடனின் வெற்றியை ஏற்க முடியாது என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆயிரக்கணக்கான ட்ரம்பின் ஆதரவாளர்கள் கட்டடத்துக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றக் கட்டடத்தின் மேல்பகுதியில் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இதேவேளை, வெள்ளைமாளிகையில் ஊடகங்களைச் சந்தித்த ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, எதிர்பாராதவிதமாக நாடாளுமன்றத்தின் வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதுடன், துணை ஜனாதிபதி பென்ஸ், சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அத்தோடு, பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் ட்ரம்ப் ஆதரவாளர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில்இ பாதுகாப்பு படையினருக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சி.என்.என். செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தை முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதையடுத்து, பாராளுமன்ற கட்டட முற்றுகை போராட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment