இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடுமுழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்தார்.
இதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை அமுலில் இருக்கும் என பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் வரும் வாரங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என பொரிஸ் ஜோன்சன் எச்சரித்தார். எனவே மக்கள் அனைவரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ் நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும், மாணவர்கள் அனைவரும் தொலைதூர கற்றல் முறைக்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேபோன்று அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்கொட்லாந்திலும் தளர்வு இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.