வீடு வாங்கினால் பத்திரப் பதிவு கட்டணங்களில் 50 சதவீத சலுகை !

by Lifestyle Editor
0 comment

வீடு வாங்குவபவர்கள், வீட்டில் விலையைவிட கூடுதல் 10 சதவீதம் வரை செலவு செய்தால்தான் பத்திரப் பதிவு, பெயர் மாற்றம் ஆகியவை செய்ய முடியும். வீட்டின் விலையில் இருந்து 1 சதவீதம் பத்திரப் பதிவு கட்டணம் மற்றும் 7 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும். இதுதவிர இதர செலவுகளும் சேர்த்தால் 10 சதவீதம் கூடுதலாக செலுத்தினால்தான் வீடு சொந்தமாகும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை கடுமையான வீழ்ச்சி கண்டது. மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் கட்டிய வீடுகளை விற்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் கடும் இழப்பைக் கண்டன. புதிய வீடுகள் விற்பனை தேங்கியது மட்டுமல்லாமல், ஏற்கெனவே வாங்கிய வீடுகளின் தவணை செலுத்த முடியாமல், வீடுகளை விற்கும் நிலைக்கும் பலர் தள்ளப்பட்டனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களின் வாடகை வீடுகளில் வசித்தவர்கள், வீடுகளைக் காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றதால், ரியல் எஸ்டேட் துறை கடும் இழப்புகளைக் கண்டுள்ளது. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக மகாராஷ்டிர அரசு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, புதிதாக வீடு வாங்குபவளுக்கு முத்திரைத் தாள் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முன்வரைவுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண விலக்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை இருக்குமாம். ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்த அமைக்கப்பட்ட தீபக் பரேக் கமிட்டி வழங்கிய ஆலோசனை அடிப்படையில், மகாராஷ்டிர அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

வீடுகளில் குடியேறும் சான்றிதழ் அளிக்கும்பட்சத்தில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களில் இருந்து 50 சதவீதம் வரை விலக்கு பெறலாம். இது தவிர, கட்டுமான நிறுவனங்கள் பல்வேறு துறைகளின் அனுமதி பெறுவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 2021 டிசம்பர் மாதம் வரை அனைத்து கட்டுமான திட்டங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு அங்குள்ள தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் அதிகமான மக்கள் வீடு வாங்க முன்வருவார்கள், அதன்மூலம் ரியல் எஸ்டேட் துறையில் மாற்றம் நிகழும் என கூறியுள்ளனர். இந்த சலுகையை பயன்படுத்தி மக்கள் புதிதாக வீடுகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த சலுகை குறைந்த விலை வீடுகளுக்கு கிடையாது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment