மனிதனா? மெஷினா?: நான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் செஞ்சூரியுடன் 639 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன்

by Lifestyle Editor
0 comment

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மூன்று போட்டிகளில் இரட்டை சதம், சதம், இரட்டை சதம் என 639 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனாவால் சுமார் ஆறு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது சேர்த்து வைத்து ரன்கள் குவித்து வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டிசம்பர் 3-ந்தேதி தொடங்கிய முதல் போட்டியில் 251 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மனைவிக்கு குழந்தை பிறந்ததால் 2-வது போட்டியில் விளையாடவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 129 ரன்களும், 2-வது இன்னிங்சில் 21 ரன்களும் அடித்தார். இந்த போட்டியில் நியூசிலாந்து கடைசி நேரத்தில் பாகிஸ்தானை ஆல்-அவுட் ஆக்கி 101 ரன்னில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் மீண்டும் ஒரு டபிள் செஞ்சூரி (238) ரன்கள் விளாசினார். மூன்று போட்டிகளில் தொடர்ந்து இரட்டை சதம், சதம், இரட்டை சதம் விளாசியுள்ளார்.

நான்கு இன்னிங்சில் (251, 129, 21, 238) 639 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 159.75 ஆகும். கேன் வில்லியம்சன் ஆட்டத்தை பார்த்து இவர் மனிதனா? அல்லது ரன் மெஷினா? என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment