100 சதவிகித இருக்கைகள் அனுமதி – ரசிகர்கள் மகிழ்ச்சிக்கா… நடிகர்கள் லாபத்திற்கா?

by Web Team
0 comment

இந்தியாவில் கொரோனா தொடங்கியதுமே லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதனால், தியேட்டர், மால், பள்ளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் முடக்கம் கடைபிடிக்க படுகிறது.

தீபாவளிக்கு முன் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளை நிரப்பி காட்சிகள் ஒளிப்பரப்பலாம் என்று அறிவித்தது மத்திய அரசு. அதனை பின்பற்றியது தமிழ்நாடு மாநில அரசு. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில படங்கள் வெளியாக உள்ளன.

விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. அதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த விஜய், ‘தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதிக்க’ கோரிக்கை விடுத்தார். சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் வெளியீட்டுக்கு தயாரானது. அதனால், அவரும் 100 சதவிகித இருக்கை நிரப்பும் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில் தமிழக அரசு சினிமா தியேட்டர்களில் 100 சதவித இடங்களை நிரப்ப அனுமதி அளித்து விட்டது. இதற்கு நன்றி தெரிவித்து அந்த சினிமா படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், இந்த முடிவு ரசிகர்கள் மகிழ்ச்சிக்காகவா… நடிகர்கள் பணம் சம்பாதிக்கவா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறதே தவிர நின்றுவிட வில்லை. அதிலும் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 800 -1000 புதிய கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். குறைந்தது 10 பேராவது கொரோனாவால் இறந்து வருகின்றனர். இந்த நிலையில் தியேட்டர்களில் முழு கதவையும் திறந்துவிட்டால் என்னவாகும்?

பெரிய நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரத்தில் மாஸ்க், சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறக்கும். அதனால், கொரோனா பரவுவதற்கான சூழல் அதிகம். அதுவும் மூடப்பட்ட ஏ.சி திரையரங்குகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஓரிருவர் இருந்தாலே அது அங்கு இருக்கும் மற்றவர்களுக்குப் பரவவும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும். தியேட்டர் ஊழியர்களுக்குப் பரவும் பட்சத்தில் அடுத்த காட்சிகளில் வருபவர்களுக்கும் இதனால் ஆபத்தே.

100 சதவித அனுமதி என்பது நடிகர்கள் மற்றும் படக்குழுவுக்கு வருமானத்தை அளிக்குமே தவிர ரசிகர்களுக்காக என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம். அரசின் இந்த முடிவுக்கு திரைத்துறையில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வருகின்றன.

“பயமாக இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள்” என்று நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு பதிவிட்டுள்ளார். நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சில சமயங்களில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது. அது போன்ற காலக்கட்டம் தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் நலன், அவர்களின் குடும்பத்தின் நலனை மனத்தில் வைத்து இந்த முடிவு குறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டும்.

Related Posts

Leave a Comment