‘அலிபாபா’ ஜாக் மா மாயம்… வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் சீனா?

by Web Team
0 comment

பிரபல சீனத் தொழிலதிபரும், அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஜாக் மா கடந்த இரு மாதங்களாக மாயமாகியுள்ளார். சீன அரசு அவரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வலம்வருகின்றன.

நவம்பர் மாதத்திலிருந்து அவரை எந்தப் பொது நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. தொழில் முனைவோர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றின் நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜாக் மா, அந்நிகழ்ச்சியின் ஃபைனலில் கலந்துகொள்ளவில்லை. அப்போதிருந்தே அவர் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வந்த வண்ணமே இருந்தன.

ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் ஏற்பட்ட பிணக்கு தான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் சீன வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அடகுக் கடைகளை விட மிக மோசமாகச் செயல்படுவதாக ஜாக் மா விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை சீன அரசு தடுத்துநிறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக ஜாக் மாவின் அன்ட் நிறுவனத்தின் பங்கை வெளியிட ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தடை விதித்தது. இதனால் வரலாறு காணாத வகையில் ஜாக் மாவின் அனைத்துப் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை அவருடைய சொத்து மதிப்பு சரிந்தது.

தன்னை எதிர்த்தால் என்ன ஆகும் என்று காட்டுவதற்காகத் தொடர்ந்து ஜாக் மாவுக்குத் தொல்லை கொடுத்துவந்துள்ளது சீன அரசு. அலிபாபா நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அபராதம் விதித்து, அதுதொடர்பான விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அவர் சீனாவை விட்டு வெளியேற தடையும் விதித்துள்ளது.

உச்சக்கட்டமாகத் தற்போது அவரைப் பொதுவெளியிலும் பார்க்க முடிவதில்லை. நடப்பவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்தவர்கள் அவரைச் சீன அரசு எங்கும் வெளியேற விடாமல் வீட்டுச் சிறையில் வைத்திருக்கலாம் என்கிறார்கள். இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுபோன்ற எதிர்மறையான யூகங்கள் எழுந்தாலும் நேர்மறையான காரணங்களும் கூறப்படுகின்றன. தனது நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் அவர் பிஸியாக இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இதுதொடர்பாக எதனையும் தெரிவிக்காமல் அலிபாபா நிறுவனமும் மௌனம் காக்கிறது.

தன்னை எப்போதும் ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் ஜாக் மா, தற்போது வெளியில் தலைகாட்டாமல் இருப்பது உலகத்திற்கே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உலகமே கேட்கும் ஒரே கேள்வி, ‘ஜாக் மா எங்கே?’. விடையை யார் கூறப் போகிறார்கள் ஜாக் மாவா? சீன அரசா? அலிபாபா நிறுவனமா?

Related Posts

Leave a Comment