கோவை
கோவை அருகே விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான ஆலந்துறை, வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் இருந்து உணவுதேடி அடிக்கடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்மேடு கிராமத்திற்குள் 2 ஆண் யானைகள் தனித்தனியாக புகுந்தன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், ஒற்றை ஆண் யானையை இன்று அதிகாலை 5.30 மணியளவில் முள்ளாங்காடு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் அதனுடன் வந்த மற்றொரு ஆண் யானை செம்மேடு குளத்துஏரி பகுதியில் உள்ள துரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் புகுந்து நெற்கதிர்களை சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது, உயர் அழுத்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் மற்றும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், பண்ணை வயலைச் சுற்றி நிலத்தின் உரிமையாளர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து தெரியவந்தது, இதுதொடர்பாக துரை மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். மேலும் காட்டுயானையை வனத்துறை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.