பிரித்தானியாவில் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், பிரித்தானியர்கள் வெளிநாடு பயணம் செய்வது மற்றும் வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவுக்கு பயணிப்பது தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன, அத்தியாவசிய காரணங்கள் இருந்தாலன்றி சர்வதேச பயணத்திற்கு அனுமதியில்லை.
விதிமுறைகளை மீறி பயணிப்போருக்கு 200 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில், பிரித்தானியாவுக்கு உள்ளேயே பயணிக்க தடையேதும் இல்லை.
ஏற்கனவே எந்த பகுதிக்கெல்லாம் பயணிக்க உங்களுக்கு சட்டப்படி அனுமதி உள்ளதோ, அங்கு நீங்கள் சென்று வரலாம், ஆனால், நீங்கள் பயணிக்கும் பகுதியில் சுகாதாரத்துறை அறிவித்துள்ள ஆலோசனைகளை பின்பற்றி நடக்கவேண்டும்.
பிரித்தானியாவுக்கு வருபவர்கள், தாங்கள் வரும் முன்னரே கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டிருக்கவேண்டும் என கட்டுப்பாடு ஒன்றை விதிக்க அமைச்சர்கள் திட்டமிட்டுவருவதாக Times பத்திரிகை தெரிவிக்கிறது.
புதிய விதிகள் அறிவிக்கப்பட்டபின், சரக்குகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. இப்போதைக்கு, பிரித்தானியாவுக்குள் வரும் பயணிகள் locator form என்னும் ஆவணத்தை நிரப்பவேண்டும்.
அதாவது அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண் முதலானவற்றை அவர்கள் தெரிவிப்பதோடு, அவர்கள் கொரோனா அபாய நாடுகள் பட்டியலிலிருக்கும் நாடு ஒன்றிலிருந்து வருவார்கள் என்றால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கும்.