நடராஜனின் ‘பெருமைமிகு தருணம்’ ட்விட்

by Web Team
0 comment

தமிழ்நாட்டின் சமீபத்திய பெருமையான அடையாளமாக மாறிவிட்டவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் தொடரில் அசத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் இந்த சீசனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெட் பவுலராக அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன் எதிர்பாராத விதமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இடம்பெற்றார்.

நடராஜன் ஒருநாள் அணியில் இருந்தாலும் முதல் இரு போட்டிகளில் ஆட விடவில்லை. மூன்றாம் போட்டியில் களமிறங்கிய நடராஜன் 3 முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கினார். அதற்கு அடுத்த டி20 போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன்.

நடராஜன் டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் டெஸ்ட் போட்டியின்போது பவுலர் உமேஷ் யாதவ்க்கு காயம்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். அந்தக் காயம் உடனடியாக சரி ஆகாத நிலையில் அவர் தொடரிலிருந்தே விலகுகிறார். அதனால், தமிழகத்தின் நடராஜன் மூன்றாம் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்கு முக்கியமான காரணம், நடராஜன் இடதுகை பவுலர் என்பதும்தான்.

இந்த வாய்ப்பில் மகிழ்ந்து ட்விட் செய்திருக்கிறார் நடராஜன். அதில், ”வெள்ளை ஜெர்ஸியை அணியும் பெருமை மிகுந்த தருணம் இது. அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

அதனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தோனியும் நடராஜனும் பேசிக்கொள்வதுபோன்ற படத்தை கமெண்டில் பதிவிட்டு ‘ நீ வா மாமே’ என்றும், ’மேமே ஏறி வாரோம்’ என்றும் பதிவிட்டுள்ளனர்.

இன்னும் சிலர், “வா தலைவா, உன் முன்னேற்றம் கண்டு சிலர் வயிரு எறிந்த போதுதான் உணர்ந்தோம்.. ஒரு சாமானியனின் வெற்றி எவ்வளவு முக்கியம் அடுத்து வரும் தலைமுறைக்கு என்று… தொடரட்டும் பயனம்” என்றும் ’Congrats bro . Tamilnadu people ellam Test match confirm paarpanga’ என்றும் உற்சாகம் அளித்து வருகின்றனர்.

நடராஜனே சொல்லியிருப்பதுபோல இது அவருக்கு அடுத்த சவால்தான். ஏனெனில், நடராஜனின் நலம்விரும்பி டேவிட் வார்னரே அப்படித்தா சொல்லியிருக்கிறார். ”ஒருநாள், டி20 போட்டிகள் அல்ல டெஸ்ட் போட்டிகள். தொடர்ந்து நிறைய பந்துகள் சரியான லென்த்தில் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தடுத்த ஓவர்களில் பந்து வீச தயாராக இருக்க வேண்டும். நடராஜனால அப்படி வீச முடியுமா என்பது முழுமையாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நடராஜன் நன்றாக வீசுவார், சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆயினும் தடைகளைத் தகர்த்து எறிந்து, சாதிப்பதே நடராஜனின் வழக்கம். அது டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என நம்புவோம்.

Related Posts

Leave a Comment