நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது, அதில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அப்போது ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காணப்பட்டது. ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்ததால் அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
ஆனாலும், ரஜினி 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் சூழலுக்கு அவர் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ரஜினிக்கு தொடர்ந்து மனச்சோர்வு பிரச்சினை இருந்து வருகிறது என்கிறார்கள்.
ஏற்கனவே உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை செய்து கொண்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரியில் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள் ரஜினி திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது.