இலங்கையின் பல இடங்களுக்கு உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் பயணம் செய்யவுள்ளதால், குறித்த பகுதிகளுக்குச் செல்ல உள்நாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், இன்றைய தினம் குறித்த சுற்றுலா குழுவினர் பொலனறுவைக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்.
பொலனறுவை சுற்றுலா பகுதிகளான பராக்கிரமபாகு மாளிகை, தலதா முற்றம், சிவன் ஆலயம் இல – 02, ரண்கொன் வெஹெர, லங்கா திலக்க விகாரை, கிரி விஹாரை மற்றும் கல் விகாரை ஆகிய பகுதிகளுக்கு இன்றைய தினம் அவர்கள் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பகுதிகளுக்குச் செல்ல உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாளைய தினம் அவர்கள் சிகிரியாவிற்கு செல்லவுள்ளமையினால் நாளை நண்பகல் 12 மணி முதல் அங்கு உள்நாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.